டீ விற்றவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தாக்கினார்களா?-இன்ஸ்பெக்டர் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

டீ விற்றவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தாக்கியதாக கூறப்படும் வழக்கில் இன்ஸ்பெக்டர ஆஜராக மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-01-13 18:49 GMT

டீ விற்றவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தாக்கியதாக கூறப்படும் வழக்கில் இன்ஸ்பெக்டர ஆஜராக மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

தாக்குதல்

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடி பேரூராட்சி பகுதியை சேர்ந்த பவுசியா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எனது கணவர் முகமது அலி ஜின்னா. எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். என் கணவர் இருசக்கர வாகனத்தில் சென்று பழனி மலை அடிவாரப்பகுதியில் டீ வியாபாரம் செய்து வந்தார். அதில் கிடைக்கும் வருமானம்தான் எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரமாக உள்ளது. நாள்தோறும் காலை 8 மணி அளவில் வீட்டில் இருந்து டீ விற்பதற்காக செல்லும் என் கணவர், மாலை 5 மணி அளவில்தான் வீடு திரும்புவார். ஆனால் கடந்த 8-ந் தேதி வியாபாரத்திற்காக சென்ற எனது கணவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

எனது கணவரின் நண்பர்கள் கொடுத்த தகவலின்படி பழனி தாலுகா போலீசார் அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக தெரிவித்தார்.

தவறு செய்யவில்லை

நானும், எனது குடும்பத்தினரும் பழனி போலீஸ் நிலையத்திற்கு சென்றபோது, அவரை பார்க்க விடாமல் போலீசார் தடுத்தனர். அடுத்தநாள் அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அவர் உடம்பு முழுவதும் பலத்த காயங்கள் இருந்தன. டீ வியாபாரம் செய்தபோது ஒரு பெண்ணை நான் கேலி செய்ததாக கூறி அங்கிருந்தவர்கள் தன்னை தாக்கி புகார் அளித்ததால், போலீசார் கைது செய்தனர். நான் எந்த தவறும் செய்யவில்லை என்று போலீசாரிடம் கூறியும் அவர்கள் கேட்கவில்லை என்றார்.

தற்போது எனது கணவர் உடல்நிலை மோசமாக உள்ளது. இதனால், தற்போது, அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இன்ஸ்பெக்டர் ஆஜராக உத்தரவு

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, மனுதாரரின் கணவருக்கு அரசு மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

இந்த வழக்கில் பழனி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரை எதிர் தரப்பினராக இந்த கோர்ட்டு தாமாக முன்வந்து சேர்க்கிறது. அவர் வருகிற 19-ந்தேதி இந்த கோர்ட்டில் ஆஜராகி, வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்