'தினத்தந்தி' செய்தி எதிரொலி: பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருந்து பிரிவில் மேற்கூரை அமைப்பு
தினத்தந்தியில் செய்தி வெளியானதை தொடர்ந்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருந்து கொடுக்கும் இடத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டது.;
பொள்ளாச்சி
தினத்தந்தியில் செய்தி வெளியானதை தொடர்ந்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருந்து கொடுக்கும் இடத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டது.
மேற்கூரை அமைக்க வேண்டும்
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி சுற்று வட்டார பகுதிகள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் சிகிச்சைக்காக வருகின்றனர். இதன் காரணமாக தினமும் சுமார் 2 ஆயிரம் வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர். உள்நோயாளியாக 300-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் ஆஸ்பத்திரிக்கு புதிதாக ரூ.10 கோடியே 50 லட்சம் செலவில் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டிடத்தில் வெளிநோயாளிகள் பிரிவு, மகப்பேறு பிரிவு செயல்பட்டு வருகிறது.
இந்த வளாகத்தில் மருந்து கொடுக்கும் இடத்தில் மேற்கூரை இல்லாமல் இருந்தது. இதனால் நோயாளிகள் மழையில் நனைந்து கொண்டு மருந்து வாங்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து கடந்த வாரம் 'தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி வெளியானது. அதன்பிறகு அங்கு மேற்கூரை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
உறவினர்களுக்கு இருக்கை வசதி
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க போதுமான நிதி உள்ளது. ஆனால் நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதில் ஆஸ்பத்திரி நிர்வாகம் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றது. மருந்து கொடுக்கும் இடத்தில் மேற்கூரை வசதி இல்லாமல் இருந்தது. இதனால் நோயாளிகள் வெயில் காலங்களில் காய்ந்தும், மழை காலத்தில் நனைந்து கொண்டும் மருந்து, மாத்திரைகள் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் மருந்து வாங்கும் இடம் உயரமாக இருந்ததால் பெண்கள், முதியவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து 'தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து மருந்து கொடுக்கும் இடத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டு உள்ளது. ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் தேவையை அறிந்து அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ஆஸ்பத்திரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.