நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் தி.மு.க. நிர்வாகி-கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம்

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் தி.மு.க. நிர்வாகி மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆணையாளர் எச்சரித்ததை தொடர்ந்து அங்கு அமைதி திரும்பியது.

Update: 2023-01-31 20:14 GMT

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் தி.மு.க. நிர்வாகி மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆணையாளர் எச்சரித்ததை தொடர்ந்து அங்கு அமைதி திரும்பியது.

குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

தி.மு.க. கவுன்சிலர்கள்

அப்போது தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் மீது, சமூக வலைத்தளத்தில் தவறான தகவல் பரப்பியது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் அளிக்க தி.மு.க. கவுன்சிலர்கள் வந்திருந்தனர். அவர்கள் அங்குள்ள ஒரு இடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

இதற்கிடையே. நெல்லை மாநகர தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன் கட்சி நிர்வாகிகளுடன் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். அவர் ஆணையாளரை அவருடைய அறையில் சந்தித்து பேசிவிட்டு வெளியே வந்தார்.

கடும் வாக்குவாதம்

அப்போது தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியனை, தி.மு.க. கவுன்சிலர்கள் சூழ்ந்து கொண்டு வாக்குவாதம் செய்தனர். அவரிடம், மாநகராட்சி அலுவலகத்துக்கு ஏன் தினமும் வருகிறீர்கள்? என்று கேட்டனர். அதற்கு அவர், நான் வருவதை நீங்கள் எப்படி கேட்கலாம்? என்று பதில் கேள்வி கேட்டார். இதையடுத்து 2 தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு மோதல் ஏற்படும் பதற்றமான சூழ்நிலை உருவானது.

ஆணையாளர் எச்சரிக்கை

இதை அறிந்த மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி தனது அறையில் இருந்து வெளியே வந்தார். அவர் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்களை எச்சரித்தார். `இது மாநகராட்சி வளாகம், இங்கு அரசியல் ரீதியாக ஏதும் பிரச்சினையில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு செய்வோர் வெளியே செல்ல வேண்டும்' என்று எச்சரித்தார். இதையடுத்து அங்கு அமைதி திரும்பியது. தி.மு.க. நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பின்னர் கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கை மனுவை ஆணையாளரிடம் வழங்கினார்கள்.

போலீஸ் பாதுகாப்பு

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீசார் மாநகராட்சி அலுவலகத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த சம்பவம் மாநகராட்சி வளாகத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்