பள்ளி மாணவர்களுடன் காலை உணவு அருந்திய திமுக எம்.பி. கனிமொழி..!

எட்டயபுரத்தில் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து திமுக எம்.பி. கனிமொழி காலை உணவு அருந்தினார்.

Update: 2023-09-12 05:38 GMT

எட்டயபுரம்,

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. அங்கு பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் காலை உணவு சமைத்து வழங்குகிறார். அங்கு பயிலும் மாணவ-மாணவிகளில் பெரும்பாலான குழந்தைகளை காலை உணவு சாப்பிட வேண்டாம் என்று பெற்றோர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த தகவல்கள் கிடைத்ததும் வருவாய்துறை, ஊராட்சி துறை, காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் பெற்றோர்கள் ஏற்க மறுத்தனர். இதனை அறிந்த சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று உசிலம்பட்டி பள்ளிக்கூடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு காலை உணவையும் சாப்பிட்டனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட அந்த பள்ளியில் திமுக எம்.பி. கனிமொழி இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். தொடர்ந்து கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவருந்தினர். தொடர்ந்து கிராம பொதுமக்களிடம் அடிப்படை பிரச்சினைகளை கேட்டறிந்தனர்.

மேலும் காலை உணவு மாணவ-மாணவிகளுக்கு பயனுள்ள திட்டம். எனவே தொடர்ந்து அனைத்து மாணவ-மாணவிகளும் காலை உணவு சாப்பிட வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி கூறினார். அப்போது கிராமமக்கள் கூறுகையில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளோம். எந்த வேறுபாடும் இல்லை. எனவே தொடர்ந்து மாணவ-மாணவிகள் காலை உணவுதிட்டத்தில் சாப்பிடுவார்கள் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்