அருணாசலேஸ்வரர் கோவிலில் ரோஜா சாமி தரிசனம்

சந்திரபாபு நாயுடு பா.ஜ.க.வின் அதிகாரத்தை பயன்படுத்தி எளிதாக வெற்றி பெற முயற்சித்துள்ளார் என்று ரோஜா தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-20 11:59 GMT

திருவண்ணாமலை,

ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த 13ம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரியும், திரைப்பட நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார்.

அப்போது அவர் கோவிலில் சாமிக்கும், அம்மனுக்கும் நடைபெற்ற அபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். ரோஜாவிற்கு கோவில் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் படத்தையும், பிரசாதத்தையும் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் தலைமையிலான அலுவலர்கள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆந்திர மாநில மந்திரி ரோஜா கூறியதாவது, கிரிவலத்தை முடித்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. மக்கள் சேவையாற்றுவதற்கு கடவுள் அருள் தனக்கு இருக்க வேண்டும். மக்கள் நேசிக்கும் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி. அவர் 2-வது முறையாக முதல்-மந்திரியாக வேண்டும் என்றும், நானும் 3-வது முறையாக எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற வேண்டும் என்றும் அருணாசலேஸ்வரரிடம் வேண்டுதலை வைத்திருக்கிறேன்.

சந்திரபாபு நாயுடு பா.ஜ.க.வின் அதிகாரத்தை பயன்படுத்தி எளிதாக வெற்றி பெற முயற்சித்துள்ளார். ஆந்திரா மக்கள் தெளிவாக உள்ளனர். ஆந்திரா மக்கள் யார் நல்லது செய்வார் என்று அறிந்திருப்பவர்கள். ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் போட்டியிடும் அனைவருக்கும் மக்கள் குழு ஆதரவாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்