விசாரணை அமைப்புகள் மீது எதிர்க்கட்சிகள் அரசியல் சாயம் பூசுவதா?- குஷ்பு கண்டனம்

விசாரணை அமைப்புகள் மீது எதிர்க்கட்சிகள் அரசியல் சாயம் பூச முயற்சிப்பது கண்டனத்துக்குரியது என குஷ்பு தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-14 07:40 GMT

சென்னை

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக பா.ஜனதாவை சேர்ந்த நடிகை குஷ்பு கூறியதாவது:-

அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம். தேவையில்லாமல் சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் மீது எதிர்க்கட்சிகள் அரசியல் சாயம் பூச முயற்சிப்பது கண்டனத்துக்குரியது. விசாரணை அமைப்புகள் அவர்களுக்கு சாதகமாக நடந்தால் சிறப்பான நடவடிக்கை என்றும் பாதகமாக அமைந்தால் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் கூறுவது வாடிக்கையாகி விட்டது. அப்படிப் பார்த்தால் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு எதிராக அரசு செயல்படுகிறது என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா?

ஊழல் காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பதையும் தி.மு.க. தலைவர் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதையும் சேர்த்து வலை பின்னுவது ஏன்? மோடி என்ற ஒரு நபரை தோற்கடிக்க இத்தனை பேர் கூட்டு சேர வேண்டி உள்ளது அப்படியானால் பலம் எந்த பக்கம் இருக்கிறது. பலமான தலைவர் யார்? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். யார் வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பது முக்கியம் என்கிறார்கள் அப்படியானால் பா.ஜனதா பலமாக இருக்கிறது. மக்கள் அந்தக் கட்சியைத்தான் ஆதரிப்பார்கள் என்பது அவர்களுக்கும் தெரிகிறது.

எதிர்க்கட்சிகள் ஒன்றாக கூடட்டும் மோடிக்கு எதிராக நிற்கும் முகம் எது என்பதை காட்டுங்கள். இவர் தான் பிரதமராக வரக்கூடியவர். இவரை ஆதரியுங்கள் என்று யாரைச் சொல்லி வாக்கு கேட்பீர்கள். நிதிஷ் குமார் நான் தான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்வாரா? இல்லை ராகுல் காந்தி நான் தான் பிரதமர் என்று சொல்வாரா? மம்தா பானர்ஜி நான் தான் பிரதமர் என்று சொல்வாரா மோடியை எதிர்த்து நிற்கும் போட்டியாளர் யார் என்ற முகம் தெரிந்தால் தானே பெட்டிக்குள் வாக்குகளை மக்கள் போடுவார்கள்.

யாருடைய முகத்தையும் காட்டுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு தயக்கம். காரணம் எல்லோருக்கும் பிரதமர் பதவி மீது ஆசை இருக்கிறது. அதையும் தாண்டி உள்ளுக்குள் பயம் இருக்கிறது. எப்படியும் மோடியை எதிர்த்து ஜெயிக்க முடியாது. தோற்றுப் போவோம் என்ற பயம் தான் அவர்களை நடுங்க வைக்கிறது. நினைத்தவுடன் யாரும் முதல் மந்திரி ஆகவோ பிரதமராகவோ வந்துவிட முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்