டாக்டர், ஊழியருக்கு கத்திக்குத்து

திருவெண்ணெய்நல்லூர் அருகே டாக்டர், ஊழியருக்கு கத்தியால் குத்திய வழிப்பறி கொள்ளையனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-06-23 17:33 GMT

திருவெண்ணெய்நல்லூர்:

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சரவணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜன் மகன் ரோபின்(வயது 22). மருத்துவமனை ஊழியரான இவர் நேற்று இரவு சரவணம்பாக்கம் வேந்தன் மருத்துவமனையில் பணி புரியும் ஒரு ஊழியரை மேட்டுக்குப்பத்தில் உள்ள வீட்டில் விட்டுவிட்டு திருக்கோவிலூர்-மடப்பட்டு சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

மேட்டுக்குப்பம் தனியார் பள்ளி அருகில் வந்தபோது 25 வயது மதிக்கத்தக்க கொள்ளையன் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து வழிமறித்தார். பின்னர் அவர், திடீரென கத்தியை காட்டி மிரட்டி, பணம் கேட்டார். உடனே ரோபின், தன்னிடம் இருந்த ரூ.100 கொடுத்தார். அதற்கு அந்த கொள்ளையன், கூகுள் பே மூலம் தனக்கு பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். உடனே ரோபின், கூகுள் பே மூலம் ஒரு ரூபாய் மட்டும் அனுப்பினார்.

கத்திக்குத்து

இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையன் கத்தியால் ரோபினை குத்தினார். இது பற்றி அவர் உடனடியாக வேந்தன் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அந்த மருத்துவமனை டாக்டரும், தி.மு.க. மாவட்ட மருத்துவ அணி செயலாளருமான காவியவேந்தன் சிலருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளையனை பிடிக்க முயன்றார். உடனே அந்த கொள்ளையன், டாக்டர் காவியவேந்தனையும் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து டாக்டர் காவியவேந்தன், திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கொள்ளையனை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்