தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-11-01 19:55 GMT

தாமரைக்குளம்:

பாலியல் பலாத்காரம்

அரியலூர் மாவட்டம், கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை(வயது 57). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 28.9.2021 அன்று 4 வயது மற்றும் 8 வயதுடைய 2 சிறுமிகளிடம், கடைக்கு சென்று வெற்றிலை, பாக்கு மற்றும் மிட்டாய் வாங்கி வருமாறு கூறி பணம் கொடுத்துள்ளார்.

பின்னர் அவற்றை வாங்கி வந்த சிறுமிகளை வீட்டிற்குள் பூட்டி வைத்து மிட்டாய் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்‌. மேலும் இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.

போக்சோவில் கைது

இந்நிலையில் அந்த சிறுமிகளில் ஒருவர், அண்ணாதுரை தன்னிடம் தவறாக நடந்தது பற்றி தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், இது பற்றி அரியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அண்ணாதுரையை கைது செய்தனர். பின்னர் அண்ணாதுரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இரட்டை ஆயுள் தண்டனை

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், 2 சிறுமிகளை பலாத்காரம் செய்த அண்ணாதுரைக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் சிறுமிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.7 லட்சம் இழப்பீடு தொகையை அரசு வழங்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் கூறியிருந்தார். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் அண்ணாதுரையை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர்.

கண்கலங்கிய உறவினர்கள்

இதற்கிடையே இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டதில் இருந்து நேற்று வரை அண்ணாதுரை ஒரு ஆண்டுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று அவரைக் காண ஏராளமான உறவினர்கள் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். நீதிபதி கூறிய தீர்ப்பை கேட்ட அவர்கள் கண்கலங்கியபடி காட்சியளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்