கவர்னரை கண்டித்து திராவிடர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும் - வைகோ அறிவிப்பு

கவர்னரை கண்டித்து திராவிடர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும் என வைகோ அறிவித்துள்ளார்.

Update: 2022-11-30 10:34 GMT

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் கூலி வேலை செய்து வரும் ஒடிசாவை சேர்ந்த அஜய்குமார் மாண்டல் என்பவரின் மனைவி ஸ்ரீதனா மாஞ்சி (வயது 23) தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். செல்போனில் ஆன்-லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட அவர் ரூ.70 ஆயிரம் வரை இழந்துள்ளார் என்றும், இதனால் மனவேதனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்த போது, ஆன்-லைனில் ரம்மி விளையாடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய அவசர சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி, கடந்த அக்டோபர் 28-ந்தேதி கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. ஆனால் கவர்னர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. தற்போது அந்த அவசர சட்டம் காலாவதியாகி விட்டது.

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டோர் தற்கொலை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமான சூழலில், அதனைத் தடுக்க தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்து டிசம்பர் 1-ந்தேதி (நாளை) காலை 11 மணிக்கு கவர்னர் மாளிகை முன்பு திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்