ஓடும் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் சாவு

பொள்ளாச்சி அருகே ஓடும் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் உயிரிழந்தார். முன்கூட்டியே சுவரில் மோதி நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.

Update: 2022-10-27 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே ஓடும் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் உயிரிழந்தார். முன்கூட்டியே சுவரில் மோதி நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

டிரைவருக்கு மாரடைப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மருதாச்சலம்(வயது 58). இவர் அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் இருந்து சிங்காநல்லூர் நோக்கி சென்ற பஸ்சை டிரைவர் மருதாச்சலம் ஓட்டி சென்றார். மாலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட சுமார் 40 பயணிகள் பஸ்சில் இருந்தனர்.

மீன்கரை ரோடு சீனிவாசபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று மருதாச்சலத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது லேசாக மோதியது. எனினும் அவர் துரிதமாக செயல்பட்டு பஸ்சை இடதுபுறமாக திருப்பி, சாலையோரத்தில் இருந்த திருமண மண்டப சுற்றுச்சுவர் மோதி நிறுத்தினார். இதனால் பயணிகள் பயத்தில் அலறினர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர்அவரை மீட்டு ஆம்புலன்சில் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே மருதாச்சலம் இறந்து விட்டதாக கூறியதாக தெரிகிறது.

இதுகுறித்து பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் விபத்து நடந்த இடத்தில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மாரடைப்பு ஏற்பட்டும் துரிதமாக செயல்பட்டு சாலையோர சுவரில் பஸ்சை மோதவிட்டு டிரைவர் மருதாச்சலம் நிறுத்தியதால் பயணிகள் எந்தவித காயமும் இல்லாமல் உயிர் தப்பினர். எனினும் அவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்