எல்லைத் தகராறு, படையெடுப்புகளால்உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோவிலில்3 நூற்றாண்டாக நிகழாத தெப்ப உற்சவம்:பலதலைமுறையாக தொடரும் கோரிக்கை நிறைவேறுமா?

எல்லைத் தகராறு, படையெடுப்புகளால் உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோவிலில் சுமார் 3 நூற்றாண்டாக தெப்ப உற்சவம் நிகழாமல் உள்ளது. பல தலைமுறையாக தொடரும் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தெப்ப உற்சவம் நடத்தப்படுமா? என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2023-01-25 18:45 GMT


காளாத்தீஸ்வரர் கோவில்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வரலாற்று சிறப்பு மிக்க காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை கோவில் அமைந்துள்ளது. இது 'தென்காளஹஸ்தி' என்று அழைக்கப்படுகிறது. ஆந்திர மாநிலம் காளஹஸ்திக்கு நிகரான பழமையான தலமாக விளங்குவதால் இந்த பெயரில் அழைக்கப்படுகிறது.

இந்த கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து வழிபாடு நடத்திச் செல்லும் கோவிலாக திகழ்கிறது. இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் கோவில் அமைந்துள்ளதால் ஒருமுறை வந்து செல்லும் பக்தர்கள் மீண்டும் வருவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

தெப்ப உற்சவம்

பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ராணி மங்கம்மாள் ஆட்சிக் காலத்தில் இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டது. ராணி மங்கம்மாள் தீவிர முயற்சியால் பெரிதாக கட்டப்பட்ட இந்த கோவில் அருகில் தெப்பக்குளமும் அமைக்கப்பட்டது. அந்த தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடத்தி, வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகளை ராணி மங்கம்மாள் நிகழ்த்தி காட்டினார்.

கடைசியாக இந்த கோவிலில் 1704-ம் ஆண்டு கால கட்டத்தில் தெப்ப உற்சவம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு படையெடுப்புகள், போர் போன்ற காரணங்களால் தெப்ப உற்சவம் நடத்தப்படவில்லை என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மன்னராட்சி, ஆங்கிலேயர் ஆட்சி கடந்து நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும் இங்கு தெப்ப உற்சவம் நடத்தப்படவில்லை.

திருப்பணிகள்

கிட்டத்தட்ட 319 ஆண்டுகளுக்கு முன்பு தெப்ப உற்சவம் நடத்தப்பட்டுள்ளது. தெப்ப உற்சவம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை 3 நூற்றாண்டுகளை கடந்தும் தலைமுறை தலைமுறையாக பக்தர்கள் முன்வைத்து வருகின்றனர். ஆனாலும், தெப்ப உற்சவம் நடத்தப்படாமல் உள்ளது.

தற்போது கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் நடந்து வருகின்றன. கோவில் வளாகம், கோபுரம் உள்ளிட்ட பகுதிகள் புனரமைக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தெப்பக்குளமும் சீரமைக்கப்பட்டு வருகிறது. தெப்பக்குளம் புதுப்பொலிவு அடைந்து வருவதை மக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்துச் செல்கின்றனர். அதே நேரத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தற்போதைய தலைமுறை பக்தர்களும் முன்வைத்து வருகின்றனர்.

தெப்ப உற்சவம் நடத்த வேண்டும்

இதுதொடர்பாக பலதரப்பு மக்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

வர்க்கீஸ் ஜெயராஜ் (வரலாற்று ஆய்வாளர், உத்தமபாளையம்) :- பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் சிறிய அளவில் கட்டப்பட்ட இந்த கோவில், ராணி மங்கம்மாள் ஆட்சிக் காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 1689-ம் ஆண்டு முதல் 1704-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு, தெப்ப உற்சவம் நடத்தப்பட்டுள்ளது.

எல்லைத்தகராறு, படையெடுப்பு போன்ற காரணங்களால் தொடர்ந்து தெப்ப உற்சவம் நடத்தப்படவில்லை. இதுதொடர்பான வரலாற்று தகவல்களை செப்பு பட்டயங்கள், கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகிறது. நுட்பமான கட்டிடக்கலையுடன் இக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது திருப்பணிகள் நடந்து வருகின்றன. கும்பாபிஷேகம் நடத்தப்படும் கையோடு தெப்ப உற்சவத்தையும் நடத்த அரசு முயற்சிக்க வேண்டும்.

அய்யப்பன் (உத்தமபாளையம் ஓம் நமோ நாராயணா பக்தசபை தலைவர்) :- காளாத்தீஸ்வரர் கோவிலில் வந்து வேண்டிக் கொள்ளும் பக்தர்கள் நினைத்தவை நிறைவேறி வருகிறது. இங்கு வந்து வேண்டிக்கொண்டால் புத்திரபாக்கியம், திருமண தடை விலகல், நீண்ட ஆயுள் ஆகியவை கிடைக்கிறது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தபிறகு கோவில்களின் திருப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு கோவில்களில் திருப்பணிகள் நடந்து வருகின்றன.

காளாத்தீஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் நடத்த வேண்டும் என்பது பல தலைமுறை மக்களின் கோரிக்கை. அந்த கோரிக்கையை இந்த நூற்றாண்டில் முதல்-அமைச்சர் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை மூலம் இக்கோவிலில் தெப்ப உற்சவம் நடத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அது மிகப்பெரிய வரலாற்று நிகழ்வாக இருக்கும்.

ஏக்கம் அதிகரிக்கிறது

செல்வம் (பக்தர், உத்தமபாளையம்) :- தெப்பக்குளம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி இருந்தது. தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சிறு வயதில் இருந்தே இங்கு தெப்ப உற்சவம் நடக்காதா? என்ற ஏக்கம் இருந்து வந்தது. தற்போது புனரமைப்பு பணிகளை பார்க்கும் போது அந்த ஏக்கம் இன்னும் அதிகரிக்கிறது. தற்போது புதுப்பிக்கப்படும் தெப்பக்குளம் மீண்டும் காட்சிப் பொருளாக இருந்து விடக்கூடாது. தமிழக அரசு இங்கு தெப்ப உற்சவம் நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதுதொடர்பாக அரசுக்கு உரிய பரிந்துரைகளை வழங்க வேண்டும்.

மீனா (பக்தர், கம்பம்) :- காளாத்தீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவத்தை எங்கள் தாத்தா, பாட்டி காலத்தில் யாரும் பார்த்தது இல்லை. எங்கள் பேரன், பேத்திகளாவது பார்க்கும் வாய்ப்பை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தெப்பம் இருந்தும் அதில் தெப்ப உற்சவம் நடத்தப்படாமல் இருப்பதால் அந்த தெப்பம் இருந்தும் காட்சிப் பொருளாக இருக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த தலத்தில் தெப்ப உற்சவம் நடத்தினால் அதுவும் வரலாற்று நிகழ்வாகவே இருக்கும். நாம் வாழும் காலத்தில் அந்த வரலாற்று நிகழ்வு நடந்தால் நன்றாக இருக்கும். அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்