உரிய நேரத்தில் பஸ்கள் இல்லாததால் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் மாணவ-மாணவிகள்-உரிய நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை

உரிய நேரத்தில் பஸ்கள் இல்லாததால் பள்ளிக்கூடம் முடிந்ததும் 2 கிலோ மீட்டர் தூரம் மாணவ-மாணவிகளுக்கு நடந்து செல்கிறார்கள். எனவே உரிய நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.;

Update:2022-06-23 19:26 IST

கிணத்துக்கடவு

உரிய நேரத்தில் பஸ்கள் இல்லாததால் பள்ளிக்கூடம் முடிந்ததும் 2 கிலோ மீட்டர் தூரம் மாணவ-மாணவிகளுக்கு நடந்து செல்கிறார்கள். எனவே உரிய நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

பஸ்சுக்காக காத்திருக்கும் மாணவர்கள்

கிணத்துக்கடவு அருகே சொலவம்பாளையம் ஊராட்சியில் இம்மிடிபாளையம் கிராமம் உள்ளது. இங்கு உள்ள கிராம மக்கள் இம்மிடிபாளையத்தில் இருந்து கிணத்துக்கடவு செல்ல காலை 8 மணி, மதியம் 2.30 மணி, மாலை 6 மணி ஆகிய நேரங்களில் பஸ் வசதி உள்ளது. காலை 8 மணிக்கு இம்மிடிபாளையத்திலிருந்து கிணத்துக்கடவு, கோவை ஆகிய பகுதிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் கூலிதொழிலாளர்கள் செல்ல பஸ் வசதி உள்ளது.ஆனால் மாலை 4.15 மணிக்கு பள்ளிக்கூடம் விடும்போது கிணத்துக்கடவில் இருந்து இம்மிடிபாளையத்திற்கு மாணவர்கள் செல்ல பஸ் வசதி கிடையாது. கிணத்துக்கடவில் இருந்து இம்மிடி பாளையத்திற்கு மாலை 6 மணிக்கு தான் பஸ் அதுவரை மாணவர்கள் பஸ் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

2 கிலோ மீட்டர் தூரம்...

இதனால் ஒருசில மாணவ-மாணவிகள் ஆட்டோ பிடித்து தங்கள் வீடுகளுக்கு செல்கின்றனர். பலர் கிணத்துக்கடவில் இருந்து வேறு டவுன் பஸ் ஏறி லட்சுமிநகர் பிரிவில் இறங்கி அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள தங்களது ஊரான இம்மிடிபாளையத்திற்கு மாணவ-மாணவிகள் முதுகில் பள்ளி புத்தகபைகளை சுமந்து கால்கடுக்க நடந்து சென்று சிரமம் அடைந்து தங்களது கிராமத்திற்கு வருகின்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் பலமுறை போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதுபற்றி கிராம மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெற்றோர் கூறியதாவது:- எங்களது ஊரிலிருந்து 60-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் தினசரி கிணத்துக்கடவு மற்றும் கோவை பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு படிக்கச் சென்று வருகின்றனர் . இதில் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள பள்ளிகளில் படிக்க செல்லும் மாணவ -மாணவிகளுக்கு பள்ளிக்கூடம் முடியும் நேரத்தில் பஸ் வசதி இல்லாததால் கிணத்துக்கடவில் நீண்ட நேரம் காத்துக்கிடக்கும் நிலை உருவாகி வருகிறது.

இதில் பெரும்பாலான மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க முடியாததால் வேறு ஒரு பஸ்சில் ஏறி லட்சுமி நகர் பிரிவில் இறங்கி வீடுகளுக்கு நடந்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் இரவில் உடல் சோர்வு ஏற்பட்டு படிக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பள்ளி முடியும் நேரத்தில் மாணவர்கள் உடனே வீட்டுக்கு திரும்பும் வகையில் பஸ்கள் இயக்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்