ராஜ்பவனின் தர்பார் ஹாலுக்கு 'பாரதியார் மண்டபம்' என்று பெயர் மாற்றம்

சென்னை கிண்டி ராஜ்பவனின் தர்பார் ஹாலுக்கு 'பாரதியார் மண்டபம்' என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

Update: 2023-08-06 14:12 GMT

சென்னை,

ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று நீலகிரி வந்தடைந்த அவர் தெப்பக்காடு பகுதியில் உள்ள யானைகள் முகாமுக்கு சென்று, பழங்குடி தம்பதி பொம்மன் – பெள்ளியை சந்தித்தார். பின்னர், நேற்று மாலை நீலகிரியிலிருந்து சென்னை வந்த திரவுபதி முர்முக்கு, கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்தனர்.

இன்று காலை சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பட்டமளிப்பு விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் கிண்டி ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலுக்கு மகாகவி பாரதியார் மண்டபம் என்று புதிய பெயர் சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு புதிய பெயர் பலகையை திறந்து வைத்தார். தொடர்ந்து மகாகவி பாரதியாரின் திருவுருவப் படத்தையும் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பெரம்பலூர் எம்.பி, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்