'டெங்கு பரவலை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை' - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தில் டெங்கு பரவலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2023-09-29 10:59 GMT

சென்னை,

டெங்கு போன்ற விஷக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்று எதிர்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் சுமார் 4,300-க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேர் உயிரிழந்ததாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையில் பாதிப்பு தமிழ்நாடு முழுவதும் அதிகமாக இருக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோர் டைபாய்டு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், தொடர்ந்து காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

சுகாதாரத்துறையை கையில் வைத்துள்ள அமைச்சரின் மெத்தனப் போக்காலும், துறை பற்றிய புரிதல் இல்லாததாலும் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இனிமேலாவது தி.மு.க. அரசு விழித்துக்கொண்டு அப்பாவி மக்களின் உயிரைக் காக்க சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2 மாதங்களில் எத்தனை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன என்ற விவரத்தை சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்