புலிகரை அருகே வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்-குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு

புலிகரை அருகே வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.;

Update:2023-07-18 00:15 IST

மின் இணைப்பு

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.

இந்த கூட்டத்தில் பாலக்கோடு தாலுகா புலிகரை அருகே உள்ள கொல்லன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், '4 வழிச்சாலை விரிவாக்க பணிக்காக நாங்கள் ஏற்கனவே வசித்து வந்த வீடுகள் அகற்றப்பட்டன. இதனால் 12 குடும்பங்களை சேர்ந்தவர்கள் சாலை அமைந்துள்ள பகுதியில் இருந்து சற்று தள்ளி வீடுகளை கட்டி உள்ளோம். ஆனால் அந்த வீடுகளுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மின்சாரம் இல்லாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். எனவே எங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரியிருந்தனர்.

ஊதிய நிலுவைத்தொகை

மொரப்பூர், கம்பைநல்லூர் பகுதிகளை சேர்ந்த கொசு ஒழிப்பு பணியாளர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், 'மொரப்பூர் கம்பைநல்லூர் பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் 20 பேருக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கேட்டபோது நிதி வரவில்லை என்று கூறுகிறார்கள். ஒவ்வொரு மாதமும் குறித்த நேரத்தில் ஊதியம் கிடைக்காததால் எங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. எனவே நிலுவையில் உள்ள ஊதியத்தை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரி இருந்தனர்.

மாரவாடி கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில்,'எங்கள் கிராமத்தை சேர்ந்த தகுதியுடைய சிலருக்கு ஊரக வேலை உறுதி திட்ட அட்டை வழங்கப்படாமல் உள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரி இருந்தனர்.

இலவச வீட்டு மனை பட்டா

பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா சாமியாபுரம், பயர்நத்தம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் பகுதியில் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் சொந்த வீடு இல்லாமல் சிரமமான சூழலில் வசித்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இருந்தனர்.

பாலக்கோடு அருகே உள்ள கடைமடை கிராமத்தை சேர்ந்த சாலம்மாள் கொடுத்த கோரிக்கை மனுவில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிட மேஸ்திரியான எனது கணவர் விபத்தில் இறந்து விட்டார். கூலி வேலை செய்து 4 பெண் குழந்தைகளை காப்பாற்றி வருகிறேன். ஆதரவற்ற விதவை சான்று கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் வழங்கப்படவில்லை. இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இருந்தார்.

மேலும் செய்திகள்