கடலூரில் வேலைவாய்ப்பு முகாம்
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலைவாய்ப்பு முகாம் கடலூரில் வருகிற 4-ந் தேதி நடக்கிறது;
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மகளிர் திட்டம் மூலம் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் அடுத்த மாதம்(நவம்பர்) 4-ந் தேதி (சனிக்கிழமை) கடலூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடக்கிறது.இம்முகாம் மகளிர் திட்டத்தில் தொழில்திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கும், மாவட்டத்தில் உள்ள தொழிற்கல்வி மற்றும் பொதுக்கல்வி படித்த அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் நடத்தப்பட உள்ளது. முகாமில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ஊரக இளைஞர்கள், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், பண்ருட்டி, தொரப்பாடி, வடலூர் பகுதியை சேர்ந்த நகர்ப்புற இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். எனவே கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் மூலம் இளைஞர் தொழில்திறன் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் இதர கல்வி தகுதிகளையுடைய இளைஞர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்று சான்றிதழ், சாதி சான்று, இருப்பிட சான்று, வருமானச்சான்று, குடும்ப அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் இரண்டு (பாஸ்போர்ட் சைஸ்) புகைப்படங்கள், சுய முகவரியிட்ட அஞ்சல் உறைகளுடன் முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெறலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை மகளிர் திட்ட அலுவலகம், 3-வது குறுக்கு தெரு, சீத்தாராமன் நகர், புதுப்பாளையம், கடலூர் - 607001 என்ற முகவரியில் அணுகி அறிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.