மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2023-10-17 19:50 GMT

கொள்ளிடம் டோல்கேட்:

திருச்சி மாவட்டத்தில் லால்குடி அருகே உள்ள தாளக்குடி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியம், திருவானைக்காவல் அருகே உள்ள கொண்டையம்பேட்டை ஆகிய பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் அரசு அனுமதித்த டோக்கனை விட அதிக லாரிகள் மணல் அள்ளுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக மணல் குவாரிகளில் மூன்று அடி தான் மணல் அள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தும், 10 அடிக்கு மேல் மணல் அள்ளுவதாகவும், பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்தநிலையில் கடந்த மாதம் 12-ந் தேதி 3-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 கார்களில் வந்து கொள்ளிடம் மணல் குவாரி மற்றும் மணல் இருப்பு வைத்திருக்கும் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் முடிவில் கட்டுக்கட்டாக ஆவணங்கள் சிக்கின. மேலும் உதவி பொறியாளர் சாதிக் பாஷா, இளநிலை பொறியாளர் ஆறுமுகம் மற்றும் உதவியாளர் சத்யராஜ் ஆகியோரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் நொச்சியம், தாளக்குடி மாட்டு வண்டி மணல் குவாரி, கொண்டையம்பேட்டை மணல் குவாரி ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கொண்டையம்பேட்டை குவாரி செயல்படாத நிலையில் தற்போது இருப்பில் உள்ள மணல் அளவு எவ்வளவு? நாள் ஒன்றுக்கு எவ்வளவு மணல் விற்பனை செய்யப்படுகிறது? அனுமதிக்கப்பட்ட அளவில் மணல் விற்கப்படுகிறதா? என்பது குறித்து 7 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்புடன் 3 அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து நொச்சியம் மற்றும் தாளக்குடி பகுதியில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், இளநிலை பொறியாளர் ஆறுமுகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்