என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை முயற்சி

ஆத்தூர் அருகே என்ஜினீயரிங் மாணவர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.75 ஆயிரத்தை இழந்ததால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-09-07 20:00 GMT

ஆத்தூர்:-

ஆத்தூர் அருகே என்ஜினீயரிங் மாணவர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.75 ஆயிரத்தை இழந்ததால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

என்ஜினீயரிங் மாணவர்

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள சதாசிவபுரம் கிழக்கு காடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், வியாபாரி. இவருடைய மகன் சூரியபிரகாஷ் (வயது 20). இவர் ஆத்தூர் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இ.இ.இ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் சூரிய பிரகாஷ் நேற்று காலை வீட்டில் இருந்த போது, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். இதில் மயக்கம் அடைந்த அவரை உடனடியாக உறவினர்கள் ஆத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சூரியபிரகாசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆன்லைன் சூதாட்டம்

மாணவர் சூரியபிரகாசின் தற்கொலை முயற்சி குறித்து ஆத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதிர்ச்சி அளிக்கும் தகவலை போலீசாரிடம் கூறி உள்ளார்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

சூரியபிரகாஷ் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதற்காக அவரது தந்தை சீனிவாசனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.64 ஆயிரத்தை அவருக்கு தெரியாமல் எடுத்து ரம்மி விளையாடி பணத்தை இழந்து உள்ளார். மேலும் கல்லூரி பாடப்புத்தகம், கட்டணம் உள்ளிட்ட ெசலவுகளுக்காக தனது வங்கி கணக்கில் வைத்திருந்த ரூ.11 ஆயிரத்தையும் இந்த சூதாட்டத்தில் இழந்துள்ளார். மொத்தமாக ரூ.75 ஆயிரத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததால், தந்தை கண்டிப்பாரே என்ற பயத்தில் சூரியபிரகாஷ் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். என்ஜினீயரிங் மாணவர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.75 ஆயிரத்தை இழந்ததால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஆத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்