விவசாயியை அடித்துக்கொன்ற வழக்கு:அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை

விவசாயியை அடித்துக்கொன்ற அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து விருத்தாசலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2023-09-25 18:45 GMT

விருத்தாசலம், 

விவசாயி

விருத்தாசலம் அடுத்த ஸ்ரீமுஷ்ணம் அருகே கொலத்தங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). விவசாயி. இவரது வீட்டின் அருகில் வசிப்பவர்கள் அர்ஜூனன் மகன்கள் ராமகிருஷ்ணன் (34), சுந்தர்ராஜன் (35). இந்த நிலையில் ராஜேந்திரன் வீட்டில் உள்ள தென்னை மரத்திலிருந்து தேங்காய்கள் அர்ஜூனன் வீட்டில் விழுவது சம்பந்தமாக இவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 22-8-2021 அன்று ராஜேந்திரன் அவரது குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ராமகிருஷ்ணன், சுந்தர்ராஜன் ஆகிய இருவரும் ராஜேந்திரன் வீட்டிற்கு சென்று, உங்கள் மரத்தில் உள்ள தேங்காய் எங்கள் இடத்தில் விழுகிறது. மரத்தை வெட்டுங்கள் எனக் கூறியுள்ளனர்.

கொலை

இதனால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன், சுந்தர்ராஜன் ஆகியோர் ராஜேந்திரனை ஆபாசமாக திட்டி தாக்கி, இரும்பு குழாய், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இதை தடுத்த ராஜேந்திரனின் தம்பி சேகரையும் ராமகிருஷ்ணன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த ராஜேந்திரனை குடும்பத்தினர் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ராஜேந்திரனின் மகன் ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணன் மற்றும் சுந்தர்ராஜன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விருத்தாசலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

அண்ணன்-தம்பிக்கு ஆயுள்

இந்த நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி பிரபா சந்திரன் தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட ராமகிருஷ்ணன், சுந்தர்ராஜன் ஆகியோர் ராஜேந்திரனை கொலை செய்தது நிரூபணமானதால் அவர்கள் 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 3 ஆண்டு சிறை தண்டனையும், ஆபாசமாக திட்டியதற்கு ஆயிரம் ரூபாய் அபராதமும், கட்ட தவறினால் கூடுதலாக 10 நாட்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் ராஜேந்திரனின் தம்பி சேகரை திட்டி தாக்கியதற்காக ராமகிருஷ்ணனுக்கு 3 ஆயிரம் ரூபாய் அபராதமும், கட்ட தவறினால் ஒரு மாதம் மெய்க்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் சுப்பிரமணியன் ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்