காட்டெருமை முட்டியதில் விவசாயி பலி
துவரங்குறிச்சி அருகே காட்டெருமை முட்டியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.;
துவரங்குறிச்சி அருகே காட்டெருமை முட்டியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
காட்டெருமை தாக்கியது
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த தெத்தூர் மலையாண்டி கோவில்பட்டியை சேர்ந்தவர் சிவஞானம் (வயது 46). விவசாயி. இவர் நேற்று காலை ஒரு வழக்கு தொடர்பாக தனது ஊரில் இருந்து புதுக்கோட்டை நீதிமன்றத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
மருதம்பட்டி சாலையில் தெத்தூர் நர்சரி கார்டன் அருகே சென்று கொண்டிருந்த போது காட்டெருமைகள் சாலையில் சென்று உள்ளன. இதைபார்த்த சிவஞானம் மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றார். அப்போது ஒரு காட்டெருமை அவரின் மார்பு பகுதியில் முட்டி தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.
விவசாயி பலி
இதில் படுகாயமடைந்த சிவஞானம் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார். அப்போது சிவஞானம் பின்னால் வந்தவர் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் சிவஞானத்தை ஆம்புலன்சு மூலம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் சிவஞானத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கை
துவரங்குறிச்சி, புத்தானத்தம், கண்ணூத்து, மருங்காபுரி சுற்று வட்டார மலை பகுதிகளில் அதிக அளவில் காட்டெருமைகள் உள்ளன. இந்த காட்டெருமைகள் வனப்பகுதியில் போதிய உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் அவை கிராமங்களை நோக்கியும், சாலைகளை நோக்கியும் வரும் சம்பவங்கள் அதிக அளவில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. விவசாய நிலங்களை காட்டெருமைகள் அழித்து வருவது ஒருபுறம் இருந்தாலும் காட்டெருமைகள் முட்டி சிலர் படுகாயமடைந்து உள்ளனர். தற்போது காட்டெருமை முட்டியதில் ஒருவர் இறந்துள்ளார்.எனவே தமிழக அரசும், வனத்துறை உயர் அதிகாரிகளும் காட்டெருமைகள் விவசாய நிலங்கள் மற்றும் கிராம பகுதிக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.