சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்
யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்வதில் போலீசாருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.;
சென்னை,
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், திமுக அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக அவ்வப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை யூடியூப் சேனல்களில் கூறி வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவர் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக கைதும் செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், அவதூறாக பேசி தன்னிடம் ரூ. 2 லட்சம் பறித்துவிட்டதாக சினிமா தயாரிப்பாளர் ஆயிஷா கடந்த மாதம் சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது புகாரளித்திருந்தார். இதனிடையே, இந்த வழக்கில் பணம் கேட்டு மிரட்டிய புகாரில் அவரை போலீசார் அவசர அவசரமாக கடந்த 13-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில், தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்து இருந்தார். இவரது மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
தன்னிடம் உள்ள பாஸ்போர்ட்டை காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும். சாட்சிகளை கலைக்கு நோக்கில் சவுக்கு சங்கர் செயல்படக்கூடாது என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அறிவுறுத்தினார்.
மேலும் யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்வதில் போலீசாருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம். புகார் செய்த அடுத்த நாள் அதிகாலையிலேயே சவுக்கு சங்கரை கைது செய்ததன் நோக்கம் என்ன? என நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார்.