மக்காச்சோளம்-பருத்தியை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மக்காச்சோளம்-பருத்தியை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-02-17 18:54 GMT

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் பூ.விசுவநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகமாக சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயத்துக்கு லாபகரமான விலை கிடைப்பதில்லை. அதனை தனியார் வியாபாரிகள் குறைந்த விலைக்கும், எடை மோசடியிலும் கொள்முதல் செய்தாலும், அதற்கான பணம் உடனடியாக கிடைப்பதில்லை. எனவே விவசாயிகளிடம் இருந்து ஒரு குவிண்டால் மக்காக்சோளத்தை ரூ.3 ஆயிரத்திற்கும், பருத்தியை குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்திற்கும் அரசே கொள்முதல் செய்யக்கோரி, விவசாயிகள் கொண்டு வந்திருந்த மக்காச்சோளம், பருத்தியை தரையில் கொட்டி பல்வேறு கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் சின்ன வெங்காயத்தை விவசாயிகளிடம் இருந்து கிலோ ரூ.50-க்கு அரசே கொள்முதல் செய்து, அதனை ரேஷன் கடை மூலம் விற்பனை செய்ய முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த கலெக்டர் கற்பகம் உடனடியாக நேரில் வந்து விவசாயிகளிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மனுக்களை பெற்றார். பின்னர் விவசாயிகளில் சிலர் கலெக்டரை சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேசிவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்