பாலை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கோவை அருகே பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பாலை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
ஆலாந்துறை
கோவை அருகே பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பாலை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு சார்பில் விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதில் பசும்பால் லிட்டருக்கு ரூ.35-ம், எருமைப்பால் ரூ.44-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விலை கட்டுப்படியாகாது என்றும், கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவை அருகே உள்ள ஆலாந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகே விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்க தொண்டாமுத்தூர் வட்டார தலைவர் ஆறுச்சாமி தலைமை தாங்கினார்.
பாலை தரையில் கொட்டினர்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் தங்கராசு, செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, பொருளாளர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்ட விவசாயிகள், பால் கொள்முதல் விலைைய உயர்த்தி வழங்க வேண்டும் என்று தாங்கள் கொண்டு வந்த பாலை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கலந்து கொண்ட விவசாயிகள் 150 லிட்டர் பாலை தரையில் கொட்டியதுடன், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:-
தொண்டாமுத்தூர் மேற்கு பகுதியில் மட்டும் 20 கூட்டுறவு சங்கங்கள் மூலம் தினமும் 6 ஆயிரம் லிட்டர் பால் சொசைட்டிக்கு வழங்கப்பட்டு வருகிறது. பசும்பால் லிட்டருக்கு ரூ.35 என்று அரசு அறிவித்து இருந்தாலும், பாலின் அடர்த்தி உள்ளிட்டவற்றை வைத்து அதிகபட்சமாக விவசாயிகளுக்கு லிட்டருக்கு ரூ.32 மட்டுமே வழங்கப்படுகிறது.
தீவனங்கள் விலை உயர்வு
தற்போது மாட்டுக்கு வைக்கோல், பசுந்தீவனம், பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, கோதுமை தவிடு ஆகியவற்றை உணவாக வழங்கி வருகிறோம். அப்போதுதான் பால் அதிகமாக கொடுக்கும். ஆனால் இந்த தீவனங்கள் விலை அதிகமாக உயர்ந்து விட்டது.
50 கிலோ எடை கொண்ட பருத்திக்கொட்டை புண்ணாக்கு மூட்டை ரூ.2,300-க்கு விற்பனையாகிறது. வைக்கோல் தஞ்சாவூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில்தான் வாங்க வேண்டிய நிலை இருக்கிறது. அதுவும் ஒரு கட்டு ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது.
லிட்டருக்கு ரூ.50 வழங்க வேண்டும்
எனவே பால் கொள்முதல் விலையாக லிட்டருக்கு ரூ.50 வழங்கினால்தான் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கும். நமது அண்டை மாநிலமான கேரளாவில் கூட விவசாயிகளிடம் இருந்து பால் லிட்டருக்கு ரூ.48 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
எனவே அதுபோன்று தமிழகத்திலும் விவசாயிகளுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த செந்தில்குமார், கோபி மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.