பொள்ளாச்சி அருகே பயங்கரம் கல்லால் தாக்கி தொழிலாளி கொலை- வாலிபர் கைது

பொள்ளாச்சி அருகே கல்லால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2022-09-04 14:57 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே கல்லால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தொழிலாளி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோட்டூர் மலையாண்டி பட்டிணத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 40).தொழிலாளி. இவர் கடந்த 5 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாததால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். சோமசுந்தரம் எப்போதும் வீட்டின் அருகே உள்ள பகவதி அம்மன் கோவில் மண்டபத்திற்கு சென்று தூங்குவது வழக்கம்.

அதேேபால் சம்பவத்தன்று, சோமசுந்தரம் வழக்கம் போல் தூங்குவதற்காக மண்டபத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த தனது நண்பர் பூபதி என்பவரிடம் பேசிக்கொண்டு படுத்திருந்தார்.

கல்லால் தாக்குதல்

அப்போது அங்கு வாலிபர் ஒருவர் மதுபாட்டிலுடன் வந்தார். பின்னர் மண்டபத்தில் அமர்ந்து மது குடித்தார். இதனைப் பார்த்த சோமசுந்தரம் அந்த வாலிபரிடம் கோவில் மண்டபத்தில் மது குடிக்க கூடாது என கண்டித்து உள்ளார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தகறாராக மாறியதோடு கைகலப்பில் முடிந்தது. மேலும் போதையில் இருந்த வாலிபர் சோமசுந்தரத்தை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்து கல்லை எடுத்து தலையில் பலமாக தாக்கினார்.

வாலிபர் கைது

இதனால் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்த சிலர் ஓடி வந்தனர். பின்னர் அவரை உடனடியாக மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவிக்குப்பின், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சோமசுந்தரம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்்தார். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொழிலாளியை குடிபோதையில் கல்லால் தாக்கி கொலை செய்ததாக சூளேஷ்வரன்பட்டியைச் சேர்ந்த ராம்குமார் (வயது 29) என்பரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்