மாணவிக்கு ரூ.1½ லட்சம் நிதி உதவி

சுவர் இடிந்து கால் முறிந்த மாணவிக்கு ரூ.1½ லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

Update: 2023-09-15 23:45 GMT

ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துசங்கிலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி கற்பகவள்ளி. இவர்களது மகள் ரூபிகா (வயது 14). இவர், ஆசாரிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி ரூபிகா பள்ளியில் இருந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது முத்துசங்கிலிபட்டி கிராமத்தில் தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணிக்காக மதிப்பீடு, திட்டம் குறித்த விவரங்கள் எழுதப்பட்ட விளம்பர சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் அவரின் கால்கள் முறிந்தது.

இதனையடுத்து அவருக்கு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவியின் கால்களை பரிசோதித்த டாக்டர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறினர். இதனால் வேதனை அடைந்த ரூபிகாவின் பெற்றோர் தங்கள் மகளுக்கு உரிய சிகிச்சை அளித்து, நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இந்தநிலையில் 2 மாதத்திற்கு பிறகு காயமடைந்த பள்ளி மாணவிக்கு தேனி மாவட்ட கலெக்டர் ரூ.1 லட்சம், மொட்டனூத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.40 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை ஆண்டிப்பட்டி தாசில்தார் காதர் ஷெரிப், மொட்டனூத்து ஊராட்சித் தலைவர் நிஷாந்தி ஆகியோர் ரூபிகாவின் பெற்றோரிடம் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்