சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Update: 2024-05-09 09:51 GMT

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 10 ஆக அதிகரித்துள்ளது. இதில் 5 பேர் பெண்கள் ஆவர்.  உயிரிழந்த 10பேர் தொழிலாளர்கள் என கூறப்படுகிறது. பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சுதர்சன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 அறைகள் தரைமட்டமாகின. செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துக்கொண்டிருப்பதால், அறைகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி சவாலாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மீட்பு பணியில் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  உராய்வு காரணமாக ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் உட்பட 10 பேர் உடல் கருகி பலியானார்கள். இதில் முதல் கட்டமாக விஜயகுமார், ரமேஷ், காளீஸ்வரன், முத்து, ஆவுடையம்மாள், லட்சுமி ஆகிய 6 பேர் மட்டுமே அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விபத்தில் உடல் கருகி இறந்த 3 பெண்களின் அடையாளம் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் உறவினர்களின் உதவியோடு 3 பெண்களை போலீசார் அடையாளம் கண்டுபிடித்தனர். அதில் சிவகாசி கோபுரம் காலனி சேர்ந்த சக்திவேல் மனைவி வசந்தி (வயது 48), மத்திய சேனை சக்திவீரன் மனைவி வீரலட்சுமி (48), சிவகாசி ரிசர்வ் லயன் இந்திரா நகர் கண்ணன் மனைவி பேச்சியம்மாள் என்கிற ஜெயலட்சுமி (25) என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் மத்திய சேனை பகுதியை சேர்ந்த கீதாரி மகன் அழகர்சாமி (வயது35) என்பவர் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு வந்ததாகவும், அவர் வீடு திரும்பவில்லை என்றும் அவரது உறவினர்கள் பட்டாசு ஆலைக்கு அவரை தேடி வந்தனர். பின்னர் அங்கிருந்த அதிகாரிகளிடம் அழகர்சாமி குறித்து தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மண் அள்ளும் எந்திரத்தின் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த அழகர்சாமியின் உடலை சிதைந்த நிலையில் துண்டு துண்டாக மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் வெடி விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்