மீன்பிடி திருவிழா

வேடசந்தூர் அருகே குளத்தில் மீன்பிடி திருவிழா நடந்தது.

Update: 2023-07-02 19:45 GMT

வேடசந்தூர் அருகே உசிலம்பட்டி கிராமத்தில் சங்கொண்டான் குளம் உள்ளது. இந்த குளத்தில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் போதிய மழை பெய்யாததால் குளத்தில் தண்ணீர் தேங்கவில்லை. இதனால் கடந்த 8 ஆண்டுகளாக மீன்பிடி திருவிழா நடைபெறவில்லை. இதற்கிடையே கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் சங்கொண்டான்குளத்துக்கு நீர்வரத்து அதிகரித்து, குளம் நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். குளத்தை நம்பியுள்ள பாசன நிலங்களில் பயிர் சாகுபடி செய்யப்பட்டு, அமோக விளைச்சல் அடைந்தது.

இந்தநிலையில் சங்கொண்டான்குளத்தில் மீன்பிடி திருவிழா நடத்த குடப்பம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி குளத்தில் நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி உசிலம்பட்டி, குடப்பம், வெல்லம்பட்டி, கெண்டையனூர், வைரக்கவுண்டனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் அதிகாலை முதலே சங்கொண்டான்குளத்தில் குவிந்தனர். அப்போது ஊர் முக்கியஸ்தர்கள் அங்குள்ள கன்னிமார் கோவிலில் சாமி தரிசனம் செய்து பின்பு குளத்து கரை மேல் நின்று வெள்ளை கொடியை அசைத்தனர். அதைத்தொடர்ந்து கிராம மக்கள் குளத்தில் இறங்கி மீன்பிடித்தனர்.

அப்போது அவர்கள் தாங்கள் கொண்டு வந்த வலை, கச்சா, ஊத்தா, கூடை, பரி உள்ளிட்ட பல்வேறு மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி போட்டிப்போட்டு மீன்களை பிடித்தனர். இதில் விரால், கெண்டை, கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் பிடிபட்டன. இதையடுத்து குளத்தில் பிடித்த மீன்களை பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு கொண்டு சென்று சமைத்தனர். பின்னர் சமைத்த மீன்களை சாமிக்கு படைத்து, அதன்பிறகு அவர்கள் சாப்பிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்