களை கட்டிய பூ, பழங்கள் விற்பனை

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் நேற்று பூஜை பொருட்கள் மற்றும் பூ, பழங்களின் விற்பனை களை கட்டியது.;

Update:2023-10-21 19:31 IST

திருப்பூர்

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் நேற்று பூஜை பொருட்கள் மற்றும் பூ, பழங்களின் விற்பனை களை கட்டியது.

அலைமோதிய மக்கள் கூட்டம்

ஆயுத பூஜை பண்டிகை நாளை(திங்கட்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் நேற்று திருப்பூரில் மார்க்கெட் மற்றும் கடை வீதிகளில் பூஜைப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பெருமாள் கோவில் அருகில் உள்ள பூ மார்க்கெட்டில் நேற்று காைல முதல் மாலை வரைக்கும் பூக்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. பூக்களின் விலையும் அதிகமாக இருந்தது. ஒரு கிலோ மல்லிகைப்பூ காலையில் ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மாலையில் கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் முல்லை ரூ.600, ஜாதிமல்லி ரூ.600, காக்கடா ரூ.600, சம்பங்கி ரூ.280, பட்டுப்பூ ரூ.100, அரளி ரூ.400 முதல் ரூ.500, செவ்வந்தி ரூ.200 முதல் ரூ.350, ரோஜாப்பூ ரூ.300 முதல் ரூ.400 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டன. நேற்று மார்க்கெட்டிற்கு சுமார் 15 டன் செவ்வந்தி பூ வரத்து இருந்ததாக வியாபாாிகள் தெரிவித்தனர்.

பூஜை பொருட்கள் விற்பனை

இதேபோல் பெருமாள் கோவில் வீதி, பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு உள்பட மாநகரின் பல இடங்களில் சாைலயோரத்தில் பொரி, கடலை, பூஜை ெபாருட்கள், வாழைக்கன்றுகள், அலங்கார பொருட்கள், மாவிலை, குருத்தோலை தோரணம், தேங்காய், பூசணிக்காய், பூ மாலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். பனியன் நிறுவனத்தினர் வாழைக்கன்றுகள், அலங்கார பொருட்கள், மற்றும் பூக்களை மொத்தமாக வாங்கி சென்றனர். கடை வீதிகளுக்கு மக்கள் அதிக அளவில் வந்ததால் மாநகரில் வாகனப்போக்குவரத்து நேற்று அதிகமாக காணப்பட்டது. இதேபோல் பழ வகைகளின் விற்பனையும் அதிகமாக இருந்தது.

விலை நிலவரம்

கடைகள் மற்றும் ஆங்காங்கே தள்ளுவண்டிகளில் வாழைப்பழங்கள், ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழ வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒரு கிலோ ஆப்பிள் ரூ.220 முதல் ரூ.280 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆரஞ்சு ரூ.150 முதல் ரூ.200, கருப்பு திராட்சை ரூ.200, சாத்துக்குடி ரூ.100, மாதுளை ரூ.200 முதல் ரூ.280, அண்ணாச்சி பழம் ரூ.70, கொய்யாப்பழம் ரூ.100 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டன. எலுமிச்சம்பழம் ரூ.200 முதல் ரூ.250, செவ்வாழை ரூ.90, பூம்பழம் ரூ.70, பூசணிக்காய் ரூ.25 முதல் ரூ.35, ஒரு ஜோடி வாழை ரூ.25 முதல் ரூ.35, ஒரு தேங்காய் ரூ.20 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) பூ மற்றும் பழங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்