கோத்தகிரியில் பூக்கள் விலை உயர்வு

ஆயுத பூஜையையொட்டி கோத்தகிரியில் பூக்கள் விலை உயர்ந்து உள்ளது.

Update: 2023-10-21 22:15 GMT

ஆயுத பூஜையையொட்டி கோத்தகிரியில் பூக்கள் விலை உயர்ந்து உள்ளது.

ஆயுத பூஜை

ஆண்டுதோறும் ஆயுத பூஜை அன்று தொழில் நிறுவனங்களில் எந்திரங்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். இதேபோல் வாகனங்களை சுத்தம் செய்து பூஜை நடத்தப்படுகிறது. மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் பூஜை செய்வார்கள். இந்த ஆண்டுக்கான ஆயுத பூஜை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

அப்போது பொதுமக்கள் பூக்கள், பழங்கள், வாழை கன்றுகள், அவல், பொரி, சுண்டல், வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு பூஜை நடத்தி வழிபாடு செய்வார்கள். ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்கள் கோத்தகிரி மார்க்கெட்டில் விற்பனைக்கு தயாராக உள்ளது. ஆயுத பூஜையையொட்டி பூக்கள் விலை உயர்ந்து இருக்கிறது.

இதில் அதிகபட்சமாக அரளிப்பூ கிலோ ரூ.500 விற்பனை ஆகிறது. ஆனால், செண்டுமல்லி பூக்கள் வரத்து அதிகமாக உள்ளதால், அதன் விலை குறைந்து உள்ளது. ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பூக்கள் விலை உயர்வு

இதுகுறித்து கோத்தகிரி பூ வியாபாரி சுரேஷ் குமார் கூறியதாவது:-

பனிக்காலத்தில் பூச்செடிகள் கருகி விளைச்சல் பாதிக்கப்படும். இதன் காரணமாகவும், விழாக்காலமாக உள்ளதாலும், தற்போது பூக்கள் வரத்து குறைந்து உள்ளது. இதனால் பூக்களின் விலை உயர்ந்து உள்ளது. கிலோவுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,200 விற்கப்பட்ட மல்லிகை பூ, தற்போது ரூ.2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கிலோ ரூ.120-க்கு விற்பனையான அரளிப்பூ ரூ.500 ஆகவும், ரூ.100-க்கு விற்பனையான சம்பங்கி ரூ.280 ஆகவும், ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்ட ரோஜா பூக்கள் ரூ.220 ஆகவும், ரூ.40-க்கு விற்பனையான செண்டுமல்லி ரூ.70 முதல் ரூ.100 ஆகவும் விலை உயர்ந்து உள்ளது.

தற்போது பூக்களின் தேவை அதிகமுள்ள நேரத்தில் பூக்கள் கிடைப்பதில்லை. மேலும் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. விலை உயர்வால் பூக்களின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. மேலும் பொதுமக்கள் பூஜைக்கு குறைந்த அளவு பூக்களை வாங்கி விட்டு, அலங்காரத்திற்கு காகித மலர்களை வாங்கி பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இதனால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்