உணவு பொருள் விற்பனை நிறுவனங்கள்உணவு பாதுகாப்புதுறை புகார் எண்ணை காட்சிபடுத்த வேண்டும்:கலெக்டர்

தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு பொருள் விற்பனை நிறுவனங்கள் உணவு பாதுகாப்புதுறை புகார் எண்ணை காட்சிபடுத்த வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.;

Update:2023-03-02 00:15 IST

உணவு பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள், உணவு பாதுகாப்புத்துறையின் புகார் எண்ணை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

புகார் எண்

தூத்துக்குடி மாவட்டத்தின் உணவு வணிக நிறுவனங்களில் கொள்முதல் செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், பாதிக்கப்பட்ட நுகர்வோர் உணவு பாதுகாப்புத் துறையில் புகார் பதிவு செய்யும் பட்சத்தில், உரிய ஆதாரங்களைத் திரட்டி வழக்கு பதிவு செய்ய உணவு பாதுகாப்புத் துறைக்கு உதவியாக இருக்கும். சில வணிகர்கள் தங்களது வளாகத்தில், உணவு பாதுகாப்புத் துறையின் புகார் பிரிவின் எண்ணை நுகர்வோர்களுக்குத் தெரியும் வகையில் காட்சிப்படுத்தி உள்ளனர். ஆனால், பெரும்பாலான உணவு வணிகர்கள் அவ்வாறு புகார் எண்ணை காட்சிப்படுத்தவில்லை. இதன் விளைவாக, நுகர்வோர் தாம் வாங்கிய உணவுப் பொருளில் தரக்குறைபாடு காணப்பட்டாலோ அல்லது உணவுப் பொருள் கெட்டுப்போயிருந்தாலோ, சம்பந்தப்பட்ட உணவு வணிகரிடம் சில சமயங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை

அதுமட்டுமின்றி, சில சமயங்களில் சம்பந்தப்பட்ட உணவு வணிகரிடம் சில நபர்கள் சட்டத்துக்கு புறம்பாக நஷ்டஈடு கோரியும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், அவ்வப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுகிறது. எனவே, நுகர்வோருக்கு பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதைக் கண்காணிக்க ஏதுவாகவும், நுகர்வோருக்குரிய உணவு பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சினைக்கு சட்டப்படியான தீர்வு காண வேண்டும் என்பதற்காகவும், உணவு வணிகர்கள் மற்றும் நுகர்வோருக்கிடையே சுமூக உறவு நிலவவும், உணவு வணிகர்கள் அனைவரும், தங்களது வளாகத்தின்; பணம் செலுத்துமிடத்தின் அருகில் உணவு பாதுகாப்பு குறித்து புகார் அளிக்க ஏதுவாக, "9444042322" என்ற மாநில உணவு பாகாப்புத் துறை ஆணையர் அலுவலகத்தின் புகார் சேவை எண்ணை காட்சிப்படுத்த வேண்டும்.

நடவடிக்கை

இந்த எண்ணுக்கு புகார் அளிப்பவரது ரகசியம் காக்கப்படும். மேலும், புகார் பெற்றுக்கொண்டதிலிருந்து 14 தினங்களுக்குள், நடவடிக்கை விவரம் சம்பந்தப்பட்ட புகார்தாரருக்கு செல்போன் மூலம் அனுப்பப்படும். எனவே, உணவு பாதுகாப்பை மேம்படுத்த எடுக்கப்பட்டு உள்ள இந்த நடவடிக்கைக்கு வணிகர்களும், நுகர்வோர்களும் ஓத்துழைப்பு அளிக்க வேண்டும், இந்த புகார் எண்ணை உள்நோக்கத்துடன் தவறாகப் பயன்படுத்தியதாக விசாரணையில் தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்