வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்

வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்

Update: 2022-12-28 18:45 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் இனப்பெருக்கம் செய்வதற்காக வெளிநாட்டு பறவைகள் முகாமிட்டுள்ளதால் இந்தாண்டு விவசாயம் செழிக்கும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு பறவைகள் வரத்து

திருப்பத்தூர் அருகே உள்ளது வேட்டங்குடி. இங்குள்ள கொள்ளுக்குடிப்பட்டி கண்மாயில் சுமார் 39 ஏக்கரில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பொதுவாக ஆண்டுதோறும் செப்டம்பா், அக்டோபர் மாதங்களில் ஆயிரக்கணக்கான பறவைகள் வெளிநாடுகளில் இருந்து இங்கு இனப்பெருக்கத்திற்காக வந்து தங்கியிருந்து இனப்பெருக்கம் செய்து குஞ்சுகளுடன் மீண்டும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இருப்பிடத்திற்கு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்தநிலையில் இந்தாண்டு பருவ மழை மற்றும் வடகிழக்கு பருவ மழை முன்கூட்டியே பெய்ய தொடங்கியதால் வேட்டங்குடி பகுதியில் உள்ள இந்த கண்மாய் முழுவதும் தண்ணீர் நிரம்பியது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் முன்கூட்டியே இங்கு ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கியுள்ளது. அவ்வாறு தற்போது இலங்கை, பர்மா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து உண்ணிகொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், நத்தை கொத்திநாரை உள்ளிட்ட பல்வேறு ஏராளமான வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் வந்து இங்குள்ள கண்மாய் மரத்தில் கூடு கட்டி முட்டையிட்டு பாதுகாத்து வருகிறது.

இதையடுத்து அந்த பகுதி முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்துள்ள இந்த வெளிநாட்டு பறவைகளை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

விவசாயம் செழிக்கும்

இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறியதாவது:-

பொதுவாக ஆண்டுதோறும் இந்த பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வரத்து அதிகரித்தாலே அந்தாண்டு முழுவதும் விவசாயம் செழித்து விளங்கும் என்பது எங்களது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு முன்கூட்டியே இந்த பறவைகள் இங்கு வந்துள்ளதால் இந்தாண்டும் விவசாயம் செழித்து விளங்கும்.

ஏற்கனவே கடந்த காலங்களில் பெய்த மழையினால் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கண்மாய்கள் நிரம்பி உள்ளது. இதை பயன்படுத்திய விவசாயிகள் தங்களது வயல்களில் நெல் பயிரிட்டு அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சில இடங்களில் 2-ம் போக நெல் நடவு பணிக்காகவும் காத்திருக்கின்றனர்.

நடவடிக்கை

எனவே இனி வரும் புத்தாண்டு தினம் விவசாயம் செழிக்கும் வகையில் இந்த பறவைகள் இங்கு வந்துள்ளது. மேலும் இங்கு வந்த இந்த பறவைகள் தற்போது மரத்தில் கூடுகட்டி முட்டையிட்டு அடைக்காத்து வருகிறது.

எனவே வனத்துறை சார்பில் இந்த பகுதியில் குரங்குகளிடம் இருந்து இந்த முட்டையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்