நெல் கொள்முதல் நிலைய பராமரிப்பை தனியாருக்கு வழங்கக்கூடாது; விவசாயிகள் சங்க மாநாட்டில் கோரிக்கை

நெல் கொள்முதல் நிலைய பராமரிப்பை தனியாருக்கு வழங்கக்கூடாது என்று திண்டுக்கல்லில் நடந்த விவசாயிகள் சங்க மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது.;

Update:2022-08-08 22:14 IST

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட மாநாடு, திண்டுக்கல்லில் இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் பெருமாள் அறிக்கை சமர்ப்பித்தார். இதில் மாநில பொதுச்செயலாளர் சண்முகம், துணை தலைவர் முகமதுஅலி, மத்தியக்குழு உறுப்பினர் சச்சிதானந்தம், மாவட்ட பொருளாளர் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் நெல் கொள்முதல் நிலையங்களின் பராமரிப்பை தனியாருக்கு வழங்க கூடாது. மேலும் விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிபடுத்த வேண்டும். உரம், விதை மற்றும் பூச்சி மருந்து உள்ளிட்ட இடுபொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சிறு-குறு விவசாயிகளுக்கு நிபந்தனை இல்லாமல் பயிர்க்கடன் வழங்க வேண்டும்.

அதேபோல் பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். வைகை அணையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து திண்டுக்கல் ஒன்றிய பகுதிகளில் இருக்கும் அணைகள், குளங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





Tags:    

மேலும் செய்திகள்