அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தனி அறைக்கு மாற்றம்

அமைச்சர் செந்தில்பாலாஜி காவேரி மருத்துவமனையில் 7வது தளத்தில் இருந்து 4வது தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

Update: 2023-06-24 12:34 GMT

சென்னை,

அமைச்சர் செந்தில் பாலாஜி வசிக்கும் அரசு இல்லத்தில் கடந்த 13ந்தேதி சோதனை செய்த அமலாக்கத்துறையினர், அவரை 14ந்தேதி அதிகாலை கைதுசெய்தனர். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ கிராம் பரிசோதனையில் அவரது ரத்தக்குழாய்களில் 3 அடைப்பு இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்க சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்று கடந்த 15-ந் தேதி அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் கடந்த 21ந்தேதி காவேரி மருத்துவமனையின் 7-வது தளத்தில் ஸ்கை-வியூ என்ற அறையில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவைசிகிச்சை முடிந்து தற்போது செந்தில்பாலாஜி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, அமைச்சர் செந்தில்பாலாஜி தனி அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவேரி மருத்துவமனையில் 7வது தளத்தில் இருந்து 4வது தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அறை எண் 435ல், அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்