மின்சாதனங்களை திருடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

விவசாய நிலங்களில் மின்சாதனங்களை திருடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சமீரன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.;

Update:2022-10-01 00:15 IST


விவசாய நிலங்களில் மின்சாதனங்களை திருடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சமீரன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

குறைதீர்க்கும் கூட்டம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் சமீரன் விவசாயிகளிடம் இருந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசிய விவரம் வருமாறு:-

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழு தலைவர் சு.பழனிசாமி:-

பரம்பிக்குளம் அணையின் மெயின் ஷட்டர் உடைந்ததால் அதிகளவில் தண்ணீர் வீணாக சென்றது. எனவே கோவை மாவட்டத்தில் அனைத்து நீர்நிலைகளில் உள்ள ஷட்டர்களை உடனடியாக பராமரிக்க வேண்டும்.

மின் இணைப்பு

பி.ஏ.பி. வாய்க்கால்களின் அருகே உள்ள கிணறுகளின் மின் இணைப்புகளை துண்டிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ்களை வாபஸ் பெறுவதுடன் மின்இணைப்பை துண்டிக்கக்கூடாது.

பூலுவப்பட்டி ஈஸ்வரமூர்த்தி:-

கோவையில் உள்ள உழவர் சந்தைகளுக்கு அதிகாலையில் பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. தொண்டாமுத்தூரில் உழவர் சந்தை அமைக்க வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குண்டர் சட்டத்தில் கைது

தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணைத்தலைவர் பெரியசாமி:- தொண்டாமுத்தூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள விவசாய நிலங்களில் மின்சாதனங்கள், சூரிய சக்தியில் இயக்கக்கூடிய மின்வேலியில் உள்ள பேட்டரிகள் உள்பட பல்வேறு பொருட்களை திருடி செல்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு பதிலளித்து கலெக்டர் பேசும்போது, விவசாய நிலங்களில் உள்ள மின்சாதன பொருட்களை திருடினால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வெள்ளலூர் இளங்கோ: வெள்ளலூர் குப்பைக்கிடங்கை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும். நொய்யல் ஆற்றில் உள்ள ஒட்டர்பாளையம் தடுப்பணையில் உடைந்த மதகுகளை சரிசெய்ய வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினார்கள். கூட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்