பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவதால் நாட்டிற்கே வளர்ச்சி ஏற்படும்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவதால் நாட்டிற்கே வளர்ச்சி ஏற்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Update: 2023-09-20 20:38 GMT


பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவதால் நாட்டிற்கே வளர்ச்சி ஏற்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சொத்துரிமை

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சி துவாராக பேலஸ்சில் நேற்று நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார். தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தாரேஸ் அகமது, மேயர் இந்திராணி, கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார், கோ.தளபதி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு உரிமைத்தொகை பெறுவதற்கான வங்கி அட்டைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண்ணுரிமை குறித்து தந்தை பெரியார் கண்ட கனவுகளுக்கெல்லாம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, செயல்வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. கலாசார ரீதியாக, சட்ட ரீதியாக, பொருளாதார ரீதியாக என 3 வழிகளில் பெண்களின் முன்னேற்றம் தடுக்கப்பட்டு வந்தது என தந்தை பெரியார் தெரிவித்தார். பெண்களுக்கு கல்வியறிவு தேவையில்லை, குடும்பத்தைப் பார்த்துக் கொள்வது மட்டும்தான் பெண்களின் வேலை என்று நெடுங்காலமாக நமது சமுதாயம் இருந்து வந்தது. இவை அனைத்தையும் எதிர்த்து பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்த இயக்கம் தான் நமது திராவிட இயக்கம்.

ஒருதாய் வயிற்றில் பிறந்தாலும் ஆண் பிள்ளைகளுக்கு மட்டுமே சொத்துரிமை, பெண்பிள்ளைகளுக்கு சொத்தில் உரிமை கிடையாது என்ற நிலைமைதான் இருந்து வந்தது. கருணாநிதி தான் பெண்களுக்கும் சொத்தில் சமஉரிமை உண்டு என்ற சட்டத்தை நிறைவேற்றினார்.

நாட்டின் வளர்ச்சி

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் "புதுமைப் பெண்" திட்டம், வேலைக்கு செல்லும் பெண்கள் பயணம் செய்வதற்காக கட்டணமில்லா இலவச பஸ் பயணத் திட்டம், மகளிர் உரிமைத்தொகை திட்டம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உங்களுக்கு என ஒரு அங்கீகாரத்தை வழங்கி உள்ளார். உங்களுடைய சகோதரனாக, மகனாக இருந்து இதைப்பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.

பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேற்றம் அடைவது நமது வீட்டிற்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டிற்கும், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நல்ல பலனைத் தரும். இந்த உரிமைத்தொகை வழங்கும் திட்டம் ஒவ்வொருவரின் வீட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் தூண்டுகோலாக அமையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு

இதைதொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில், ஜப்பான் நாட்டின் 'ஜைக்கா' நிறுவன நிதி உதவியுடன் ஒருங்கிணைந்த அறுவைச்சிகிச்சை வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை, நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும் பணிகள் குறித்து, டீன் ரத்தினவேலுவிடம் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி பிரச்சினை குறித்து, எடப்பாடி பழனிசாமி எதுவும் பேசமாட்டார். இது உட்கட்சி பிரச்சினை. இது பற்றி யாரும் பேச கூடாது என அந்த கட்சியினர் கூறி விட்டனர். சண்டை போட்டு கொள்வதுபோல் நடிப்பார்கள் என்றார்.

முன்னதாக மதுரையில் மின்கம்பம் விழுந்து காயம் அடைந்த ஜூடோ விளையாட்டு வீரர் பரிதி விக்னேஷ்வரனை சந்தித்து ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்