சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அரசு டாக்டர்கள் உண்ணாவிரதம் - சீமான் ஆதரவு

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அரசு டாக்டர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-28 12:45 GMT

சென்னை:

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அரசு டாக்டர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வந்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.

சீமான் நிருபர்களிடம் அளித்தப் பேட்டியில், 'உயிரை காக்கும் பணியை செய்கின்ற அரசு டாக்டர்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். தமிழக அரசு அரசு டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர்கள், டாக்டர்கள், நர்சுகள், மாணவர்கள், மீனவர்கள் தொடர்ந்து போராடுகின்றனர். ஆனால், சிறப்பான ஆட்சியை தருவதாக அரசு சொல்கிறது' என்றார்.

போராட்டத்தில் அரசு டாக்டர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை கூறியதாவது:-

அரசாணை 354-ன்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கலந்தாய்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட அரசு டாக்டர்களுக்கு நீதி வேண்டும். கொரோனாவால் உயிரிழந்த டாக்டர் விவேகானந்தன் மனைவிக்கு கல்வித் தகுதிக்கேற்ற அரசு வேலை தரப்பட வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்