அரசு ஆஸ்பத்திரிகளில் இருக்கும் வசதியை கொண்டு சிறப்பான சேவை வழங்க வேண்டும்

அரசு ஆஸ்பத்திரிகளில் இருக்கக்கூடிய வசதிகளை வைத்து பொதுமக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்க வேண்டுமென கலெக்டர் ஜெயசீலன் வலியுறுத்தினார்.;

Update:2023-02-26 00:20 IST


அரசு ஆஸ்பத்திரிகளில் இருக்கக்கூடிய வசதிகளை வைத்து பொதுமக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்க வேண்டுமென கலெக்டர் ஜெயசீலன் வலியுறுத்தினார்.

பேரவை கூட்டம்

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் 2022-2023-ம் ஆண்டிற்கான மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது:-

பொது சுகாதாரத்துறையின் சேவைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால் சமுதாயத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். அந்தந்த சமுதாயத்தில் உள்ள சுகாதார சிக்கல்கள் மற்றும் தேவைகளை கண்டறிந்தும், சுகாதார பணியாளர்களுக்கும் சமுதாயத்தினருக்கிடையே நல்லுறவை ஏற்படுத்துவதுமே இதன் முக்கியமான நோக்கமாகும். ஒவ்வொரு மருத்துவரும், வட்டார மருத்துவர்களும், ஊராட்சி பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட களப்பணியாளர்கள் கருத்துகைள பெற்று முன்னுரிமை அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவ வசதிகள்

அரசு ஆஸ்பத்திரிகளில் இருக்கும் வசதிகளை கொண்டு சிறப்பான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் மக்கள் பணியாளர்களின் கருத்துக்களை கேட்டு முன்னுரிமை அடிப்படையில் தங்களது வட்டாரங்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் குறித்தும் அத்தியாவசிய மருத்துவ கட்டமைப்பு வசதி குறித்தும் அறிக்கை அளிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் கூட்டத்தில் திருத்தியமைக்கப்பட்ட காசநோய் திட்டம், தேசிய தொழுநோய் திட்டம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மற்றும் பொது சுகாதாரத்துறை மூலம் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. கூட்டத்தில் சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன், மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி, சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் முருகவேல், துணை இயக்குனர்கள் டாக்டர் யசோதா மணி, கலு சிவலிங்கம், யூனியன் தலைவர்கள் அருப்புக்கோட்டை சசிகலா, சாத்தூர் நிர்மலா கடற்கரை ராஜ், சிவகாசி விவேகன் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்