டிராக்டர் மீது அரசு பஸ் மோதல்; 3 பேர் பலி

உளுந்தூா்பேட்டை அருகே டிராக்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2022-09-22 18:45 GMT

உளுந்தூர்பேட்டை, 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் வசந்தகுமார் (வயது 25), பழனிமலை மனைவி நாவலேரி (45), மதிவாணன் மனைவி ரேவதி (32), நாகராஜ் (45), மகேஸ்வரி (30).

கட்டிட தொழிலாளர்களான இவர்கள் நேற்று வேலைக்காக செங்குறிச்சிக்கு சென்றனர். பின்னர் அங்கு வேலை முடிந்ததும் கலவை எந்திரம் இணைக்கப்பட்ட டிராக்டரில் அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர்.

டிராக்டரை திருநாவலூரை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் ஓட்டினார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கெடிலம் ஆற்று பாலத்தில் டிராக்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது.

இதில் டிராக்டர் மற்றும் கலவை எந்திரம் முற்றிலும் உருக்குலைந்தது. மேலும் பஸ்சின் முன்பகுதியும் சேதமடைந்தது.

பலி

இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த வசந்தகுமார், நாவலேரி ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் டிராக்டரில் வந்த வெற்றிவேல், நாகராஜ், ரேவதி, மகேஸ்வரி மற்றும் பஸ்சில் பயணம் செய்த சுப்பிரமணி (67), கார்த்தி மணி (65), முத்து (45) ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரேவதி பரிதாபமாக இறந்தார்.

மேல்சிகிச்சைக்காக நாகராஜ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

போலீசார் விசாரணை

இதனிடையே இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சாலையின் இருபுறத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து மாற்றுபாதையில் வாகனங்களை போலீசார் அனுப்பி வைத்து போக்குவரத்து பாதிப்பை சரிசெய்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்