புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update:2023-09-21 00:30 IST

மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா பகுதியில் இயக்கப்படும் டவுன் பஸ்கள் சில நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 9ஏ, 9பி போன்ற பஸ்களின் சேவை காலை வேளையில் வருவதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் காத்திருந்து பயணிக்கின்றனர். எனவே பஸ்களை காலை, மாலை வேளையில் தடையின்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜூ, பரமக்குடி.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

ராமநாதபுரம் நகரில் கோட்டைமேடு பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் நிரம்பி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்படுகிறது. மேலும் தேங்கிய கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் சூழல் நிலவுகிறது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், ராமநாதபுரம்.

சாலை அகலப்படுத்தப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் சாலை குறுகலாக உள்ளது. இந்த சாலையில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதனால் கனரக வாகனங்கள் செல்லும்போது மாணவிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் சாலையை அகலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காதர்மீரா, ஆர்.எஸ்.மங்கலம்.

சிக்னல் வேண்டும்

ராமநாதபுரம் நகரில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மதுரை ரோடு, வாட்டர்டேங்க் ரோடும் சந்திக்கும் பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கின்றன. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க தயக்கம் காட்டுகின்றனர். எனவே அங்கு தானியங்கி டிராபிக் சிக்னல் அமைக்க உடனடி நடவடிக்கை எடுப்பார்களா?

அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.

எரியாத தெருவிளக்குகள்

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் நூர்முகம்மது பகுதியில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இரவு நேரத்தில் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் பெண்கள், குழந்தைகள் சாலையில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்யது அபுதாகீர், பனைக்குளம்.

Tags:    

மேலும் செய்திகள்