விதிமீறலில் ஈடுபடும் பட்டாசு ஆலை உரிமையாளர் மீது குண்டாஸ் பாயும் - மாவட்ட நிர்வாகம்

அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக தொழிலாளர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2024-05-10 16:23 GMT

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விபத்து நடந்த பட்டாசு ஆலையில் விதிமீறல் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் முதல் தகவல் அறிக்கையின் படி, அரசு உரிமம் பெற்ற கட்டிடத்திற்குள் பட்டாசுகள் தயாரிக்காமல் கட்டிடத்தின் வெளியே பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் குறிப்பாக விருதுநகர், சிவகாசி பகுதிகளில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் வெடி விபத்துகளும் அதனைத் தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், விதிமீறலில் ஈடுபடும் பட்டாசு ஆலை உரிமையாளர் மற்றும் போர்மேன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், உரிய அனுமதி இன்றி சட்ட விரோதமாக செயல்படும் பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பட்டாசு ஆலைகளை அனுமதி இன்றி உள் வாடகை, குத்தகைக்கு விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக ரசாயனங்கள் மற்றும் தொழிலாளர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்