மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தராக பெலிக்ஸ் நியமனம்

பெலிக்ஸ், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும், செயல் துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளார்.

Update: 2023-12-07 21:15 GMT

சென்னை,

நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமனம் செய்வதற்கு, தகுதியான நபரை தேர்வு செய்ய தேடுதல் குழு கடந்த ஆகஸ்டு மாதம் அமைக்கப்பட்டது. அந்த வகையில் தேடுதல் குழு தேர்வு செய்து பரிந்துரைத்த 3 பேர் பட்டியலில், ஒருவரை பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என்.ரவி தேர்வு செய்துள்ளார். அதன்படி, மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தராக என்.பெலிக்ஸ் என்பவரை நியமனம் செய்து கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து 3 ஆண்டுகள் இந்த பதவியில் அவர் இருப்பார். பெலிக்ஸ் 32 ஆண்டுகள் கல்வி அனுபவம் பெற்றவர். தற்போது தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும், செயல் துணைவேந்தராகவும் இருந்து வருகிறார். மேலும் 15 ஆண்டுகளுக்கு மேலாக பேராசிரியராகவும் பணியாற்றியதோடு, பல்கலைக்கழக நிர்வாகத்தில் அதிக அனுபவம் கொண்டவர் என்றும் சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், முட்டுக்காட்டில் உள்ள மீன்வளர்ப்பு அடைகாக்கும் மற்றும் தொழில் பயிற்சி இயக்குனராகவும், சென்னை மீன்வள கழகத்தின் முதுகலை படிப்புகளுக்கான டீனாகவும் (பொறுப்பு), சென்னை மாதவரத்தில் உள்ள மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்பக் கல்லூரியின் டீனாகவும் (பொறுப்பு), சென்னை மீன்வள தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலராகவும் இருந்திருக்கிறார். கல்வி சார்ந்த நிகழ்வுகளுக்காக பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளார். மேலும் புத்தகங்களை எழுதியும், ஆய்வுக்கட்டுரைகளை தயாரித்தும் வெளியிட்டுள்ளார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) சார்பில் ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி வலியுறுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆகஸ்டு மாதம் மீன்வள பல்கலைக்கழகத்துக்கு அமைக்கப்பட்ட தேடுதல் குழுவில் யு.ஜி.சி. பிரதிநிதி இல்லை. அப்படி இருந்தும், அந்த குழு பரிந்துரைந்த ஒருவரை கவர்னர் தேர்வு செய்துள்ளார்.

இதுபற்றி கவர்னர் மாளிகை தரப்பில் கேட்டபோது, 'இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.ஏ.ஆர்.) கீழ் மீன்வளப் பல்கலைக்கழகம் வருகிறது. அந்த விதிகளில், துணைவேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி. பிரதிநிதி நியமிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை' என தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்