மனநலம் பாதித்த நபர் சிகிச்சைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
நெல்லையில் மனநலம் பாதித்த நபர் சிகிச்சைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.;
தமிழக அரசின் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு திட்டத்தின் மூலமாக தமிழகம் முழுவதும் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரியும் நபர்களை மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தென்காசி ரெயில்நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் மீட்கப்பட்டார். பின்னர் அவர் நெல்லை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியின் கீழ் இயங்கி வரும் கண்டியப்பேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மனநல மருத்துவத்துறை சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அவர் குணமடைந்து உள்ளார். இதையடுத்து அவருடைய குடும்பத்தினரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வரவழைத்தனர். அவர்களிடம் மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதி பாலன், சிகிச்சை பெற்று குணமடைந்த நபரை ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் மனநல மருத்துவத்துறை தலைவர் டாக்டர் ராஜேஷ்பூபதி மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.