களை ஒட்டுண்ணியால் உளுந்து பயிர்கள் பாதிப்பு

குமராட்சி ஒன்றியத்தில் களை ஒட்டுண்ணியால் உளுந்து பயிர்கள் பாதிப்பு வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு

Update: 2023-03-15 18:45 GMT

காட்டுமன்னார்கோவில்

குமராட்சி ஒன்றியத்தில் சம்பா பருவ நெல் அறுவடைக்கு பின் 10 ஆயிரத்து 500 ஹெக்டேர் நிலப்பரப்பில் உளுந்து, பச்சை பயிறு போன்ற பயறு வகைப்பயிர்கள் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது குமராட்சி ஒன்றியத்தில் சில பகுதிகளில் கஸ்குட்டா களை ஒட்டுண்ணியானது பயறு வகை பயிர்களில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து கடலூர் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா, குமராட்சி ஒன்றியத்தில் களை ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறும்போது, பயறு வகை பயிர்களில் களை ஒட்டுண்ணி செடியாக வளர்ந்து பயிரில் இருந்து உணவையும், நீரையும் எடுத்துக்கொண்டு வளர்ச்சியை குறைத்து பெருமளவில் மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. கோடை உழவு மற்றும் பாதிக்கப்பட்ட செடிகளை வயல்களில் இருந்து முழுவதுமாக அகற்றி அழிப்பதன் மூலம் களை ஒட்டுண்ணியை கட்டுப்படுத்தலாம். மேலும் களை முளைப்பதற்கு முந்திய களைக்கொல்லியான பெண்டிமெத்தலின் 30 மில்லி களைக்கொல்லி மருந்தை ஏக்கருக்கு 400 மில்லி லிட்டர் என்ற அளவில் 200 லிட்டர் நீரில் கலந்து விதைப்பு செய்த 3-ம் நாளில் வயலில் ஈரம் இருக்கும் நிலையில் கைதெளிப்பான் கொண்டு தெளிப்பதன் மூலமாகவும், களை முளைத்த பின் தெளிக்கும் களைக்கொல்லியான இமாசிதபைர் 10 எஸ்.எல். என்ற மருந்தை ஏக்கருக்கு 250 மில்லி லிட்டர் என்ற அளவில் 200 லிட்டர் நீரில் கலந்து விதைத்த 20 முதல் 25 நாட்களுக்குள் தெளிப்பதன் மூலமாகவும் கட்டுப்படுத்தலாம் என்றார். அப்போது குமராட்சி வேளாண்மை உதவி இயக்குனர் அமிர்தராஜ், வேளாண்மை அலுவலர் சிந்துஜா, உதவி வேளாண்மை அலுவலர்கள் பிரகாஷ், குணச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்