தர்மபுரி அருகே பேரீச்சை அறுவடை தொடங்கியது; உள்ளூர் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கினர்
தர்மபுரி அருகே 11 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட பேரீச்சை அறுவடை தொடங்கியது.
பேரீச்சை சாகுபடி
தர்மபுரி அருகே அரியகுளத்தில் விவசாயி நிஜாமுதீன் பாலைவனத்தில் விளையும் அரேபியா பேரீச்சை 35 ஆண்டிற்கு முன்பு சாகுபடி செய்துள்ளார். சில செடிகள் மட்டுமே ஆரம்பத்தில் சாகுபடி செய்த அவர் வருவாய் கிடைக்க தொடங்கியதை தொடர்ந்து தற்போது 11 ஏக்கரில் 34 வகையான பேரீச்சையை சாகுபடி செய்துள்ளார். இந்த பேரீச்சை ஜூன் மாதங்களில் அறுவடைக்கு வரும்.
அதன்படி அரியகுளத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பேரீச்சை தற்போது அறுவடை தொடங்கியது. ஒவ்வொரு மரத்திலும் குலை, குலையாய் தொங்கும் பேரீச்சை பழங்களை தொழிலாளர்கள் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த பேரீச்சை பழங்களை உள்ளூர் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து விவசாயி நிஜாமுதீன் கூறியதாவது:-
பசுமை குடில்
சவுதி அரேபியா தாவரவியல் ஆய்வுக்கூடங்களில் திசு மூலமாக உற்பத்தி செய்து, பல்வேறு நிலைகளில் 3 ஆண்டுகள் வரை ஆய்வகம் மற்றும் பசுமை குடிலில் வளர்த்து நன்கு திரட்சியான பிறகே பேரீச்சை செடிகள் விற்பனைக்கு வருகிறது. அதை வாங்கி நடவு செய்து 2 ஆண்டுகளில் காய்க்க தொடங்கி விடும்.
முதல் வருடத்தில் ஒரு மரத்தில் 50 கிலோ வரை காய்க்கும். 3 ஆண்டு பருவத்தில் 100 கிலோ வரையும், 5 ஆண்டு பருவத்தில் 300 கிலோ வரையும் பேரீச்சை காய்க்கும் தன்மை கொண்டது.
மேலும் பேரீச்சை பழங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரகங்கள் உள்ளன. அதில், அஜ்வால், பர்ரி உள்ளிட்ட 34 ரக பேரீச்சை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை தொடங்கி உள்ளது. தண்ணீர் இல்லாமலும், வறட்சியாலும் விவசாயத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு பேரீச்சை சாகுபடி வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.600 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை வியாபாரிகள் விற்பனைக்காக வாங்கி செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.