ஊட்டியில் கொட்டி தீர்த்த கனமழைவெள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்; படகு சவாரி ரத்து
ஊட்டியில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாகி வாகனங்கள் சிக்கி தவித்தன. மேலும் தொடர்மழை காரணமாக படகு இல்லத்தில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.;
படகு இல்லம் செல்லும் சாலையில் தேங்கிய மழை வெள்ளத்தில் ஒரு கார் சிக்கிய காட்சி.
தாவரவியல் பூங்காவில் மழைக்கு சுற்றுலா பயணிகள் ஒரு குடையின் கீழ் நின்ற காட்சி.
ஊட்டி: ஊட்டியில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாகி வாகனங்கள் சிக்கி தவித்தன. மேலும் தொடர்மழை காரணமாக படகு இல்லத்தில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.
ஊட்டியில் பெய்த கனமழை
குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கோவை, நீலகிரி, உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் முதல் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழையும், சில இடங்களில் கனமழையும் கொட்டி தீர்த்தது. குறிப்பாக மதியம் 12 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை மாலை 7 மணி வரை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். அத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்தவர்கள் மற்றும் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய மாணவ-மாணவிகள் மற்றும் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியவர்களும் மழையால் கடும் அவதிப்பட்டனர். மேலும் விவசாய நிலங்களில் தண்ணீர் அதிக அளவு தேங்கி இருந்ததால் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
வெள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்
ஊட்டியில் இருந்து படகு இல்லம் செல்லும் சாலையில் ெரயில்வே பாலத்தின் கீழ் மழைவெள்ளம் அதிக அளவில் தேங்கி நின்றிருந்தால் அந்த வழியாக வந்த 2 கார்கள் தண்ணீரில் சிக்கி தத்தளித்தன.
மேலும் கார்களை மீண்டும் இயக்க முடியவில்லை. இதனால் அந்த வழியாக வந்தவர்கள் உதவியுடன் காரை, உரிமையாளர்கள் தள்ளி ஓரமாக கொண்டு சென்றனர். சேரிங்கிராஜ் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தை வெள்ளம் சூழ்ந்தது. ஊட்டி ரெயில்வே போலீஸ் நிலையத்தையும் மழை வெள்ளம் சூழ்ந்தது. தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனையாமல் இருக்க ஆங்காங்கே இருந்த குடைகளின் கீழ் நின்றனர். இதையடுத்து நீண்ட நேரம் மழை நிற்காமல் தொடர்ந்து பெய்ததால் தங்கும் விடுதிகளுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர்.
படகு சவாரி ரத்து
இதேபோல் ஊட்டி படகு இல்லத்தில் மழை காரணமாக துடுப்பு படகு மற்றும் மிதி படகு சேவை மதியத்திற்கு பின்னர் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. ஆனாலும் மோட்டார் படகுகள் மட்டும் இயக்கப்பட்டது.
இதற்கிடையே படகு இல்ல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மிதி படகுகளும் துடுப்பு படகுகளும் இயக்கப்படுவதில்லை என்றும், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடையாமல் இருக்க மோட்டார் படகை மட்டும் இயக்கி வருவதாகவும் படகு இல்ல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊட்டியைபோல் சுற்றுவட்டார பகுதிகளான மஞ்சூர், எமரால்டு, பாலடா உள்பட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.