சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி?
சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி?;
திருப்பூர்,
தென்னையில் பாதிப்பை ஏற்படுத்தும் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறை குறித்து வேளாண்மைத்துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சுருள் வெள்ளை ஈக்கள்
திருப்பூர் மாவட்டத்தில் தென்னை விவசாயம் அதிகம் உள்ளது. ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் அதிக சேதமுண்டாக்கும் ஒரு சாறு உறிஞ்சும் பூச்சியாகும். இந்த ஈக்கள் தாக்கப்பட்டால், இலைகளின் கீழ்ப்பரப்பில் சுருள் சுருளாக பூச்சிகளின் முட்டைகள் காணப்படும். முட்டைகள் அடர்ந்த வெண்ணிற மெழுகு போன்ற துகள்களால் மூடப்பட்டு இருக்கும். இவற்றின் உடலில் இருந்து சுரக்கும் ஒருவகை தேன் போன்ற இனிப்பு திரவத்தினால் கரும்பூஞ்சனம் பெருமளவில் அதன் மேல்வளர்ந்து, பயிர் பரப்பு முழுவதும் கருப்பு நிறமாக மாறிவிடும். இதனால் ஒளிச்சேர்க்கை தடைபட்டு பயிர் வளர்ச்சி பெருமளவில் குன்றிவிடும். இனிப்பு திரவத்துக்கு அதிகமாக எறும்புகள் வரும். இந்த பூச்சிகளால் இலைகளில் சாறு உறிஞ்சப்பட்டு, பயிரின் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்பட்டாலும் பயிர் முழுவதுமாக இறந்து விடுவதில்லை.
தென்னையை தவிர மா, வாழை, கொய்யா, சப்போட்டா, வெண்டை, ஜாதிக்காய், காட்டாமணக்கு, சீத்தாபழம், எலுமிச்சை, செம்பருத்தி போன்றவற்றிலும் இந்த பூச்சிகள் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பூச்சி தாக்குதலின் ஆரம்ப நிலையிலேயே மஞ்சள் ஒட்டுப்பொறிகள் ஏக்கருக்கு 7-10 என்ற அளவில் பயன்படுத்தி பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து, அவற்றை அதிக அளவில் பயன்படுத்தி பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்கலாம். பூச்சிகளின் நடமாட்டம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அதிகமாக இருப்பதால் விளக்கு பொறிகளை ஏக்கருக்கு 2 என்ற அளவில் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
இறக்கை பூச்சி
கரும்பூஞ்சான வளர்ச்சியை அகற்ற லிட்டருக்கு 25 கிராம் என்ற அளவில் மைதா மாவுப்பசையை தண்ணீரில் கலந்து இலைகளின் மேல்பகுதியில் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். இந்த பூச்சிகளை கட்டுப்படுத்த உயிரியல் ஆய்வகங்களில் இருந்து பச்சை கண்ணாடி இறக்கைப்பூச்சிகளின் முட்டைகளை, இளம்பருவ பூச்சிகளை பெற்று வயலில் விட வேண்டும்.
தென்னை வயலில் இயற்கையாகவே அதிக அளவில் இந்த பூச்சிகளை தாக்கி அழிக்கும் ஒட்டுண்ணிக்குளவிகள் காணப்படுகின்றன. நாளடைவில் பெருகி, பூச்சிகளின் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும். தோட்டத்தில் ரசாயன பூச்சிக்கொல்லிகளை தெளித்து இடையூறு செய்யாமல் பாதுகாப்பது விவசாயிகளின் கடமையாகும்.
இந்த தகவலை வேளாண்மை இணை இயக்குனர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
------------------