தூய்மை காவலர்களுக்கு வீட்டுமனை பட்டா: கலெக்டர் தகவல்

தூய்மை காவலர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என கலெக்டர் பிரபுசங்கர் கூறினார்.

Update: 2023-07-08 18:39 GMT

தூய்மை காவலர்களுக்கு பயிற்சி

கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளியணை ஊராட்சியில் நேற்று தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் கவின்மிகு கரூர் என்ற திட்டத்தில் அனைத்து வீடுகளிலும் குப்பைகளை சேகரிக்க பயன்படுத்தும் பேட்டரி வாகனத்தை (மின்கல வாகனம்) இயக்குவதற்கு தூய்மை காவலர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு தூய்மை காவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

தூய்மை காவலர்களுக்கு குப்பைகளை சேகரிக்கும் பேட்டரி வாகனத்தை இயக்குவதற்கான பயிற்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் அனைத்து வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரிக்க வேண்டும். சரியான நேரத்தில் குப்பைகளை வாங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

துணி நெய்வதற்கான பணிகள்

குப்பைகளை ஒருங்கிணைக்கும் வகையில் செயல்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை என சேகரிக்க வேண்டும். குப்பைகளை தரம் பிரித்து தருவது மூலம் மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் போன்ற பொருட்களை அரைத்து சாலைகள் அமைப்பதற்காகவும், பிளாஸ்டிக் பாட்டில்களை நூல்களாக்கி துணி நெய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.வீடுகளில் உள்ள கழிவுநீரினை முறையாக கழிவுநீர் வாய்க்கால்களில் விட வேண்டும்.

அரசு நலத்திட்ட உதவிகள்

திறந்தவெளியில் மலம் கழிப்பதை அறவே நிறுத்த வேண்டும். கழிவறை இல்லாத வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு தனிநபர் இல்ல கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்படும். அதோடு ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்களும் அமைத்து கொடுக்கப்படும். மேலும், இந்த தூய்மை பணியை மேற்கொள்ளும் தூய்மை காவலர்களுக்கு சீருடை, காலணி, வீட்டுமனை பட்டா, நலவாரியத்தில் உறுப்பினர் அட்டை, அவர்கள் குடும்பத்திற்கு தேவையான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்