"மொழியை திணித்தால் மக்கள் மனதில் அதை எதிர்க்க வேண்டும் என்ற உணர்வு தான் எழும்" - கனிமொழி எம்.பி.
ஒரு மொழியை அனைவரிடமும் திணித்தால் அதை எதிர்க்க வேண்டும் என்ற உணர்வு தான் மக்கள் மனதில் எழும் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
தூத்துக்குடி,
ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு கடந்த மாதம் அளித்துள்ள அறிக்கையில் (11-வது தொகுதி) மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் போன்றவற்றிலும், மத்திய பல்கலைக்கழகங்களிலும் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலம் உள்ள இடங்களில் இந்தியை இடம்பெற செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தி பேசும் மாநிலங்கள் எனும் 'ஏ' பிரிவு மாநிலங்களில் இதனை முழுமையாக செயல்படுத்தி, ஓரளவு இந்தி பேசும் மாநிலங்களிலும் இதனைத் தொடர்வதுடன், இந்தியா முழுமைக்கும் இந்தியைப் பொது மொழியாக்கிட வேண்டும் என்கிற பரிந்துரையும் இதில் இடம்பெற்றுள்ளது.
இதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக முதல்-அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், "இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம்" என மத்திய அரசை கடுமையாக சாடியிருந்தார்.
இந்த நிலையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போது அவர் கூறியதாவது;-
"இந்தியா என்பது பல்வேறு மாநிலம், வாழ்க்கை, மொழி முறை கொண்டது. அனைவரும் இந்தி பேச வேண்டும் என திணிக்க கூடாது. இந்தி பிரச்சனையை மறுபடியும், மறுபடியும் கொண்டு வருவது மத்திய அரசுதான். மத்திய அரசு செயல்படாமல் இருப்பதை திசை திருப்புவதற்காகதான் இதனை செய்கிறார்களோ என்று நமக்கு தோன்றுகிறது.
ஒரு மொழியை அனைவரும் பேச வேண்டும் என திணிக்கக் கூடிய நிலையை உருவாக்கும் போது, அனைத்து அதிகாரிகளும் அந்த மொழியை தான் பயன்படுத்த வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தும் போது நிச்சயமாக மக்கள் மனதில் அதை எதிர்க்க வேண்டும் என்ற உணர்வு தான் எழும்."
இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.