நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உத்தரவை கலெக்டர்கள் அமல்படுத்தாவிட்டால் தலைமைச்செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2022-08-01 23:56 GMT

சென்னை,

சென்னை வேளச்சேரி, தரமணி, உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வடிகால்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்று பத்திரிகையில் செய்தி வெளியானது.

இதன் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு, சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் இருந்தால், அவற்றை சட்டப்படி அகற்ற வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது.

அவகாசம்

இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து மார்ச் 31-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளையும், மாவட்ட கலெக்டர்கள் பலர் அமல்படுத்தவில்லை. இது தொடர்பான வழக்குகளும் நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

சுற்றறிக்கை

அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யாத கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம்.

ஐகோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஆனாலும் ஐகோர்ட்டு உத்தரவை கலெக்டர்கள் அமல்படுத்தவில்லை.

ஆஜராக வேண்டும்

இந்த உத்தரவுகளை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்.

அதுமட்டுமல்ல, இந்த உத்தரவை அமல்படுத்தும் வரை விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிடுவோம். சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்த அதிகாரிகள் ஊதியம் பெற அனுமதிக்க முடியாது. இந்த வழக்குகளையும் அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்