தொடர் கனமழையில்தண்ணீரில் நெற்பயிர்கள் மூழ்கி நாசம்

கிருஷ்ணராயபுரம் பகுதியில் பெய்த தொடர் கனமழையில்தண்ணீரில் நெற்பயிர்கள் மூழ்கி நாசமானது. இதனால் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-13 18:30 GMT

நெற்பயிர்கள் நாசம்

அமராவதி ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆறு கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பகுதிகளான மணவாசி வாய்க்கால் வழியாகப் பிரிந்து கட்டளை, ரங்கநாதபுரம், மணவாசி, மாயனூர் வரை வந்து அதன் பிறகு காவிரியில் கலக்கிறது. இந்த வாய்க்கால் மூலம் சுமார் 1,000-த்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களை பாசனம் பெற்று வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்ததின் காரணமாக வீரராக்கியம், புலியூர் போன்ற பகுதியில் இருந்து வெளியேறிய மழை நீர் வீரராக்கியம் வழியாக வந்து மணவாசி வாய்க்காலில் கலந்து விட்டது. இதனால் இப்பகுதியில் நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்களை முழுவதும் தண்ணீர் மூழ்கடித்துள்ளது. இதனால் இப்பகுதியில் சுமார் 300 ஏக்கர் வரை நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி நாசமானது.

கோரிக்கை

அதேபோல ரங்கநாதபுரம் வடக்கு கிராம பகுதியிலும் நெல் வயல்களிலும் மழை நீர் சூழ்ந்து உள்ளது இதனால் நெற்பயிர்கள் அழுகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்